

மகாராஷ்டிர அரசு ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டத்தை முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு செயல்படுத்த உள்ளது.
வாரத்துக்கு 5 நாட்கள் வேலைத்திட்டம் இந்த மாதம் 29-ம் தேதியில் இருந்து தொடங்கப்பட உள்ளது.
அரசு ஊழியர்களின் பணித்திறனை மேம்படுத்துதல், செலவைக் குறைப்பது, அரசு ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் குடும்பத்தினருடன் அதிகமான நேரத்தைச் செலவிடுதல் போன்றவற்றுக்காக இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டது.
இதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 5 நாட்கள் திட்டத்தால் மின்சாரம், தண்ணீர், வாகனப் பயன்பாடு, பெட்ரோல் தேவை ஆகியவை சேமிக்கப்படும்.
ஏற்கெனவே இந்தத் திட்டம் மத்திய அரசு அலுவலகங்களில் நடைமுறையில் இருக்கிறது. குறிப்பாக ராஜஸ்தான், பிஹார், பஞ்சாப், டெல்லி, தமிழகம், மேற்கு வங்கத்தில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்கள் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சிவசேனா கட்சியைச் சேர்ந்தவரும் அமைச்சருமான ஏக்நாத் ஷின்டே கூறுகையில், "அரசு ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இது இருந்துவந்தது. இந்தத் திட்டத்தை சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசு நிறைவேற்றி வைத்ததில் பெருமை கொள்கிறது" எனத் தெரிவித்தார்.
இந்தப் புதிய திட்டப்படி அரசு ஊழியர்கள் நாள் தோறும் 8 மணிநேரம் வீதம், வாரத்துக்கு 40 மணிநேரம் பணியாற்ற வேண்டும். இதற்கு முன் 7.15 மணிநேரம் மட்டுமே நாள் ஒன்றுக்கு பணியாற்றிய நிலையில் இப்போது 8 மணிநேரம் வேலை செய்ய வேண்டும். மாதத்துக்கு 176 மணிநேரமும், ஆண்டுக்கு 2,112 மணிநேரமும் உழைக்க வேண்டும்.
தற்போது சராசரி வேலைநாட்கள் என்பது 288 நாட்களாக இருக்கிறது. இந்தப் புதிய திட்டத்தால் மாதத்துக்கு 174 மணிநேரமாகவும், ஆண்டுக்கு 2,088 மணிநேரமாகவும் வேலைநேரம் குறையும்.
இந்தப் புதிய வேலைநேரம் சேவைத்துறையில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களுக்குப் பொருந்தாது. அதாவது காவல்துறை, மருத்துவம், தீயணைப்பு, குடிநீர் சப்ளை, துப்புரவு, கல்வித்துறை, அரசுக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பள்ளிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றுக்குப் பொருந்தாது.
இதற்கு முன் காலை 9.45 மணிக்கு அலுவலகத்துக்கு வரும் அரசு ஊழியர்கள் மாலை 5.30 மணிவரை பணியாற்றுவர். இனிமேல் மாலை 6.15 மணிவரை பணியாற்ற வேண்டும். ஆண்டுக்கு 288 வேலைநாட்களாக இருப்பது 264 நாட்களாகக் குறையும்.