

மாவட்ட சட்டச்சேவை ஆணையத்தின் வழக்கறிஞர் தனக்குத் தேவையில்லை என்று நிர்பயா வழக்குத் தூக்குத் தண்டனை கைதி பவன் குப்தா மறுத்து விட்டதாக திஹார் சிறை அதிகாரிகள் டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது
ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் டெத் வாரண்ட் பிறப்பித்தது டெல்லி விசாரணை நீதிமன்றம். ஆனால், இருமுறையும் குற்றவாளிகள் ஒவ்வொருவரும் ஒருவர் பின் ஒருவராகக் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்தும், சீராய்வு மனுத் தாக்கல் செய்தும் தண்டனையைத் தள்ளிப்போடக் காரணமாக இருந்தனர். இதனால் தூக்கு தண்டனையைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றவாளிகளுக்குத் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டதை எதிர்த்தும், குற்றவாளிகளுக்கு தனித்தனியாகத் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியும் மத்திய அரசு சார்பிலும், டெல்லி அரசு சார்பிலும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் இதுவரை சீராய்வு மனுவையும், கருணை மனுவையும் தாக்கல் செய்யாத தூக்குக் கைதி பவன் குப்தா செய்யும் தாமதம் காரணமாக அதிருப்தி வெளியிட்டுள்ள நீதிபதி தர்மேந்தர் ராணா, புதனன்று வழக்கறிஞர் உதவி வேண்டுமா என்று பவன் குப்தாவுக்கு வாய்ப்பு வழங்கினார்.
அதாவது தன் முந்தைய வழக்கரிஞரை நீக்கிய குப்தா, புதிய வழக்கறிஞரை நியமித்துக் கொள்ள கால அவகாசம் கோரியுள்ளார்.
மாவட்ட சட்ட உதவி சேவைகள் அணையம் பவன் குப்தா தந்தையிடம் வழக்கறிஞர்கள் பட்டியலை அளித்து இதில் ஒருவரை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டது. ஆனால் யாரையும் தேர்ந்தெடுக்க அவர் மறுத்து விட்டதாக கோர்ட்டில் டெல்லி திஹார் சிறை அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.
4 கைதிகளில் பவன் குப்தா மட்டுமே இன்னமும் சீராய்வு மனுவையும் தாக்கல் செய்யவில்லை, குடியரசுத் தலைவரிடம் கருணை மனுவையும் தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையவை!