Last Updated : 13 Feb, 2020 03:40 PM

 

Published : 13 Feb 2020 03:40 PM
Last Updated : 13 Feb 2020 03:40 PM

நிர்பயா வழக்கு: 'நான் தீவிரவாதி அல்ல; குற்றத்தை தொழிலாகவும் செய்யவில்லை'- வினய் சர்மா வாதம்; தீர்ப்பு நாளை ஒத்திவைப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரில் ஒருவர் வினய் சர்மா. இவர் தனது கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தற்கு எதிராக மனுத்தாக்கல் செய்தார். இதன் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நாளை (வெள்ளிக்கிழமை) ஒத்தி வைத்துள்ளது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்‌சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது

ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் டெத் வாரண்ட் பிறப்பித்தது டெல்லி விசாரணை நீதிமன்றம். ஆனால், இருமுறையும் குற்றவாளிகள் ஒவ்வொருவரும் ஒருவர் பின் ஒருவராகக் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்தும், சீராய்வு மனுத் தாக்கல் செய்தும் தண்டனையைத் தள்ளிப்போடக் காரணமாக இருந்தனர். இதனால் தூக்கு தண்டனையைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

குற்றவாளிகளுக்குத் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டதை எதிர்த்தும், குற்றவாளிகளுக்கு தனித்தனியாகத் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியும் மத்திய அரசு சார்பிலும், டெல்லி அரசு சார்பிலும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வினய் சர்மா மனுத்தாக்கல் செய்திருந்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர். பானுமதி, அசோக் பூஷன், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் முன்னிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வினய் சர்மா தரப்பில் வழக்கறிஞர் ஏ.பி.சிங் ஆஜராகி வாதிட்டார்.

அவர் கூறுகையில், "வினய் சர்மாவின் மருத்துவ அறிக்கை, சமூகப் புலனாய்வு அறிக்கை, மனுதாரரின் இயல்பான வேண்டுகோள் என அனைத்தையும் முறையாகப் பரிசீலிக்காமல் அவசர கதியில் குடியரசுத் தலைவர் மனுவை நிராகரித்துள்ளார். திஹார் சிறையில் வினய் சர்மா சட்டவிரோதமான சிறையில் அடைக்கப்பட்டு, அங்கு பல்வேறு கொடுமைகள் நடந்தன.

வினய் சர்மாவுக்கு நடந்த அநீதிகளுக்கு உச்ச நீதிமன்றத்தில்தான் முறையிட முடியும். மனுதாரர் வேறு எங்கு செல்வது. அதனால்தான் நீதி கேட்டு வந்திருக்கிறேன். மனுதாரர் தீவிரவாதி அல்ல, அடிக்கடி குற்றம் செய்யும், குற்றத்தையே தொழிலாகச் செய்யும் வழக்கத்தையும் வைக்கவில்லை. கருணை அளிக்க முகாந்திரம் இருக்கிறது.

சிறையில் இருந்தபோது பல்வேறு மனதீரியான கொடுமைகள் நடந்ததால், பலமுறை உளவியல் சிகிச்சைக்கு வினய் சர்மா சென்றுள்ளார். அவரின் மோசமான மனநிலைக்குத் தொடர்ந்து உளவியல் சிகிச்சை அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்

மேலும் மத்திய அரசு சார்பிலும், டெல்லி அரசு சார்பிலும் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். மூன்று தரப்பு வாதங்களும் ஏறக்குறைய 2 மணிநேரம் நடந்தது.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், "குடியரசுத் தலைவர், குற்றவாளி வினய் சர்மாவின் அனைத்து ஆவணங்களையும் தீர ஆய்வு செய்து முடித்தபின்தான் அந்த மனுவை நிராகரித்துள்ளார். சட்டத்தின்படிதான் குடியரசுத் தலைவர் செயல்பட்டுள்ளார். வினய் சர்மா உடல் நிலை குறித்து மருத்துவ அறிக்கையும், அவர் உடல் ரீதியாக தகுதியாக இருக்கிறார், தூக்கிலிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு நாளை பிற்பகலில் இந்த மனு மீது தீர்ப்பு வழங்குகிறேன் என அறிவித்தது,

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x