Last Updated : 13 Feb, 2020 02:55 PM

 

Published : 13 Feb 2020 02:55 PM
Last Updated : 13 Feb 2020 02:55 PM

அரவிந்த் கேஜ்ரிவால் பதவியேற்பு; மக்கள், 'பேபி மப்ளர் மேனு'க்கு மட்டுமே அழைப்பு: அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு இல்லை

டெல்லி மாநில முதல்வராக 3-வது முறையாகப் பொறுப்பேற்கும் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் அரவிந்த் கேஜ்ரிவாலின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு எந்த அரசியல் கட்சியின் தலைவர்களையும், மாநில முதல்வர்களையும் அழைக்கப் போவதில்லை என அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

ஆனால், கேஜ்ரிவால் போன்று மப்ளர் அணிந்து தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது அனைவரையும் கவர்ந்த மப்ளர் அணிந்த சிறுவனுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது. பாஜக 8 இடங்களை வென்றது. காங்கிரஸ் கட்சி எந்த இடத்தையும் கைப்பற்றவில்லை.

இந்நிலையில் டெல்லி மாநிலத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக அரவிந்த் கேஜ்ரிவால் வரும் 16-ம் தேதி பதவி ஏற்கிறார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு எந்த அரசியல் கட்சித் தலைவர்களையும், மாநில முதல்வர்களையும் அழைக்கவில்லை என அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் கூறுகையில், "டெல்லி முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால் பதவி ஏற்பது டெல்லிக்கான குறிப்பிட்ட நிகழ்ச்சி. இதில் எந்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், முதல்வர்களுக்கும் அழைப்பு இல்லை. கேஜ்ரிவால் தலைமை மீது நம்பிக்கை வைத்த மக்களுடன் சேர்ந்துதான் முதல்வராக கேஜ்ரிவால் பதவியேற்க உள்ளார்" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலைச் சந்திக்க ஒன்றரை வயதுக் குழந்தையை கேஜ்ரிவால் போன்று தலையில் மப்ளர் அணிந்து, மீசை வரைந்து சிறிய கண்ணாடி அணிவித்து அழைத்து வந்திருந்தனர்.

அவ்யன் தோமர் என்ற பெயர் கொண்ட அந்தக் குழந்தை சமூக ஊடகங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆம்ஆத்மி தலைமை அலுவலகத்தில் நீண்ட நேரம் குழந்தையுடன் பெற்றோர் காத்திருந்தும் முதல்வர் கேஜ்ரிவால் வரவில்லை. இதனால், கேஜ்ரிவாலைச் சந்திக்க முடியாமல் குழந்தையின் பெற்றோர் வீடு திரும்பினர்.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி தனது ட்விட்டர் தளத்தில் இன்று பதிவிட்ட செய்தியில், "அரவிந்த் கேஜ்ரிவால் வரும் 16-ம் தேதி முதல்வராகப் பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு பேபி மப்ளர் மேன் அழைக்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x