Last Updated : 13 Feb, 2020 01:46 PM

 

Published : 13 Feb 2020 01:46 PM
Last Updated : 13 Feb 2020 01:46 PM

இனி ரூ.20 அல்ல..13 ரூபாய்தான்: 'பாட்டில் குடிநீரை' கூடுதல் விலைக்கு விற்பவர் மீது நடவடிக்கை எடுக்க கேரள அரசு முடிவு

கேரளாவில் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் கொண்டு வர கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, ஒரு லி்ட்டர் 'மினரல் வாட்டரை'(சுத்திகரிக்கப்பட்டகுடிநீர்) 13 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் தற்போது பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்படும் ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இனிமேல் 13 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யக்கூடாது.

இதுகுறித்து உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் பி. திலோத்தமன் நிருபர்களுக்கு திருவனந்தபுரத்தில் இன்று அளித்த பேட்டியில், " குடிநீர் பாட்டில் விலையை வர்த்தகர்கள் தங்கள் விருப்பப்படி விலையில் விற்பனை செய்கிறார்கள், வரைமுறையின்றி விலை வைக்கப்படுகிறது என்று மக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் அரசுக்கு வந்தன. இதையடுத்து, குடிநீரை அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்துக்குள் கொண்டுவர மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு முதல்வர் பினராயி விஜயனும் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்படி அடுத்த இருநாட்களில் உத்தரவு பிறப்பிக்கப்படும். இனிமேல் மாநிலத்தில் எந்த வர்த்தகரும், கடைக்காரரும் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் விலையை ரூ.13-க்கு மேல் விற்பனை செய்யக்கூடாது. இப்போதைக்குக் குடிநீரை மட்டும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கீழ் கொண்டுவந்துள்ளோம். மற்ற பொருட்களைக் கொண்டுவருவதைப் பற்றி ஆலோசிக்கவில்லை. மக்களின் குடிக்கும் குடிநீருக்கு அதிகவிலை வைக்கப்படுவதால் அதைக் கட்டுக்குள் கொண்டுவர இருக்கிறோம். அனைத்து குடிநீரும் பிஎஸ் தரச்சான்று பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பெறாத நிறுவனங்களையும் மூடப்போகிறோம் " எனத் தெரிவித்தார்.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பே குடிநீர் பாட்டில்கள் விலையை 11 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை குறைக்கக் கேரள அரசு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. ஆனால், அப்போது குடிநீர் சுத்திகரிப்பாளர்கள், வர்த்தகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியதைத் தொடர்ந்து அந்தமுடிவை அப்போது அரசு கைவிட்டது.

கேரள பாட்டில் குடிநீர் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், " கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பே, பாட்டில் குடிநீர் விலையை ரூ.12 வரை குறைக்க ஒப்புக்கொண்டோம். ஆனால் எங்கள் கூட்டமைப்பில் உள்ள சிலர் கடுமையாக எதிர்த்ததால் அதைக் கைவிட்டார்கள். ஆனால், கேரள அரசு உத்தரவிட்டபின் இனிமேல், 13 ரூபாய்க்கு மேல் குடிநீரை விற்பனை செய்தால், அது கிரிமினல் குற்றமாகும்" எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x