Last Updated : 13 Feb, 2020 12:39 PM

 

Published : 13 Feb 2020 12:39 PM
Last Updated : 13 Feb 2020 12:39 PM

கிரிமினல் வழக்கு உள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்த காரணத்தை வெளியிட வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இனி வரும் காலங்களில், கிரிமினல் வழக்குகள் உள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்ததற்கான காரணத்தையும், வேட்பாளர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரத்தையும் அரசியல் கட்சிகள் 48 மணிநேரத்துக்குள் இணையதளம், சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக இன்று உத்தரவு பிறப்பித்தது.

பாஜக மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயே உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில் தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் கிரிமினல் பின்புலம் குறித்து மக்களுக்கு ஊடகங்களிலும், நாளேடுகளிலும் தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு பிறப்பித்த உத்தரவில், "அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடும்போது தங்களின் குற்றப்பின்னணி குறித்து நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டது.

இது தொடர்பாகக் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிக்கையில், படிவம்-26 ஐ தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்தது. அதன்படி வேட்பாளர்கள் தங்கள் குற்றப் பின்னணி குறித்து அந்தப் படிவத்தில் குறிப்பிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ''தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு தெளிவில்லாமல் இருக்கிறது. வேட்பாளர்கள் தங்கள் குற்றப்பின்னணி குறித்து எந்தெந்த முன்னணி நாளேடுகளில், தொலைக்காட்சிகளில் எத்தனை நாட்களுக்குள் தெரிவித்து விளம்பரம் வெளியிட வேண்டும் என்ற தெளிவான உத்தரவு இல்லை.


மக்கள் பார்க்கும் ஆர்வம் இல்லாத தொலைக்காட்சிகளிலும், மக்களைச் சென்றடையாத நாளேடுகளிலும் வேட்பாளர்கள் விளம்பரம் செய்து தப்பிக்கிறார்கள். இதற்குரிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும்'' என அஸ்வினி உபாத்யாயே கோரியிருந்தார். மேலும், மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர்ந்திருந்தார்

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹின்டன் பாலி நாரிமன், ரவிந்திர பாட் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:

"இனி வரும் காலங்களில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களைத் தேர்வு செய்தவுடன் அவர்கள் மீது நிலுவையில் இருக்கும் கிரிமினல் வழக்குகள், விவரங்களை தங்கள் இணையதளத்தில் வெளியிட வேண்டும். அதுமட்டுமல்லாமல் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் அந்த வேட்பாளர்களை ஏன் தேர்வு செய்தோம் என்பதற்கான காரணத்தையும் அதில் தெரிவிக்க வேண்டும்.

வேட்பாளர்களைத் தேர்வு செய்ததற்கான காரணம் தகுதியின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, வெல்லக்கூடிய சாத்தியத்தால் தேர்வு செய்ததாக இருத்தல் கூடாது. அதை நியாயப்படுத்தவும் கூடாது.

மேலும், வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட 48 மணிநேரத்துக்குள், பிராந்திய நாளேடு, தேசிய நாளேடு, ஃபேஸ்புக் மற்றும் சமூக ஊடகங்களில் தங்கள் வேட்பாளர்கள் குறித்த விவரத்தையும், அவர்கள் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்தும் அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும்.

72 மணிநேரத்துக்குள் பிராந்திய நாளேடு, தேசிய நாளேடு, சமூக ஊடகங்களில் வெளியிட்ட விவரங்கள் குறித்த பட்டியலையும் தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவரங்களை அரசியல் கட்சிகள் தாக்கல் செய்யாத பட்சத்தில் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டும்".

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x