Published : 13 Feb 2020 10:12 AM
Last Updated : 13 Feb 2020 10:12 AM

ஒமர் கைதுக்கு எதிரான வழக்கில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு எதிராக மக்களை திரட்ட வேண்டும் என்று ஒமர் அப்துல்லா பேசியதாலும் இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தீவிரமாக செயல்பட்டதாலும் கடந்த 5-ம் தேதி அவர் பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு காவல் நீட்டிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஒமர் அப்துல்லாவின் சகோதரி சாரா அப்துல்லா பைலட் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஒமர் அப்துல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரினார்.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.வி.ரமணா, சந்தானகவுடர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையில் இருந்து தான் விலகிக் கொள்வதாக நீதிபதி சந்தான கவுடர் அறிவித்தார்.

தனது விலகலுக்கான காரணம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து மற்றொரு அமர்வு முன் வியாழக்கிழமை இம்மனு மீது விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x