

ஏழைக் குடும்பங்கள் ஆண்டுக்கு தலா ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெற உதவும் ‘ஆயுஷ்மான் பாரத்- மத்திய அரசின் இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம்’ கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த சுகாதாரத் திட்டத்தில் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற முடிவதில்லை. இந்த நோய்க்கான சிகிச்சைகளுக்கு கூடுதல் செலவாவதே இதற்குக் காரணம். இந்நிலையில் ஆயுஷ்மான் பாரத் திட்டப் பயனாளிகள் இதுபோன்ற கூடுதல் செலவுக்கான சிகிச்சைகளைப் பெற ரூ.15 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இதற்காக திட்ட விதிமுறைகளை சுகாதாரத்துறை அமைச்சகம் திருத்தியுள்ளது.
தேசிய சுகாதார நிதியின் (ஆர்ஏஎன்) கீழ் இது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து அரசு மருத்துவமனைகள், புற்றுநோய் மருத்துவமனைகள், மாநில சுகாதாரச் செயலர்கள், தேசிய சுகாதார ஆணையத்தின் செலவினத் துறை, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்தும் அமைப்பு ஆகியவற்றுக்கு சுற்றறிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. ரத்தப் புற்றுநோய், கல்லீரல் பிரச்சினை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகளை பெற இந்த தேசிய சுகாதார நிதியின் கீழ் பயனாளிகளுக்கு உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. - பிடிஐ