Published : 02 May 2014 12:42 PM
Last Updated : 02 May 2014 12:42 PM

கறுப்புப் பணத்தை பதுக்கியவர்களை சுவிஸ் பாதுகாக்கிறது: சிதம்பரம் குற்றச்சாட்டு

சுவிட்சர்லாந்து வங்கியில் கறுப்புப் பணத்தை பதுக்கிவைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை தர, அந்த அரசு தேவையற்ற நிபந்தனைகளை விதிக்கிறது. இதன் மூலம் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை சுவிட்சர்லாந்து அரசு பாதுகாத்து வருகிறது என்று மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், "சுவிட்சர்லாந்து இந்தியாவின் இரட்டை வரிவிதிப்பு முறையை மேற்கோள் காட்டி, கருப்புப் பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்களின் பட்டியலை தர முடியாது என்று கூறிவருகிறது. அந்த பட்டியலை வெளியிட அந்நாட்டு அரசு தேவையற்ற நிபந்தனைகளை விதிக்கிறது. இதன் மூலம் அந்த நாட்டு வங்கியில், கறுப்புப் பணத்தை பதுக்கிவைத்துள்ளவர்களை அந்த அரசு பாதுகாத்து வருகிறது என்பது புலப்படுகிறது.

இந்தியா, ஸ்விட்சர்லாந்தின் உள் விவகாரங்களை கேட்கவில்லை, சட்டத்திற்கு உட்பட்ட உடன்படிக்கையின் கீழ் அந்த நாட்டில் முதலீடு செய்திருக்கும் இந்தியர்களின் கணக்கை வெளியிட மறுப்பது ஏற்க முடியாதது.

சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்பு பணம் குறித்த தகவல்களை சுவிஸ் வங்கிகள் உடனடியாக தர வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் சுவிட்டசர்லாந்து அரசை கோரி உள்ளது." என்றார்.

இந்தியா- சுவிட்சர்லாந்து இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை அளிக்குமாறு இந்திய வருமான வரித்துறை அதிகாரிகள் அந்நாட்டை கேட்டுக் கொண்டனர்.

ஆனால் பட்டியலை அளிக்க சுவிட்சர்லாந்து மறுத்துவிட்டது. இதையடுத்து சுவிட்சர்லாந்து நிதி அமைச்சருக்கு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடிதம் எழுதியதற்கு பின்னர் இந்தியாவின் இரட்டை வரி விதிப்பு கொள்கைக்கு, தங்கள் நாட்டுக்கு முரண்பட்டது என்று வங்கி கணக்கு பட்டியலை அளிக்க அந்த நாடு மறுத்துவிட்டது. இந்நிலையில், கறுப்பு பணம் குறித்த தகவல்களை சுவிஸ் வங்கிகள் கொடுக்க வேண்டும் என, இந்தியா மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x