

இந்தியாவுக்கு வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும்அவரது மனைவி மெலனியாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரண்டு நாள் அரசு முறைபயணமாக வரும் 24-ம் தேதி இந்தியா வருகிறார். அவருடன், அவரது மனைவி மெலனியா ட்ரம்பும் வருகிறார். அமரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு ட்ரம்ப் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். டெல்லி மற்றும் குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் இருவரும் பங்கேற்பார்கள் என வெள்ளை மாளிகை ஊடக பிரிவு செயலாளர் ஸ்டெபானி கிரிஷாம் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது மனைவிமெலனியா ஆகியோர் இந்தியாவுக்கு வருகைதர உள்ளது மிகவும்மகிழ்ச்சியாக உள்ளது. நமது சிறப்பு விருந்தினர்களான அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். அவர்களது வருகையால் இருதரப்பு உறவு மேலும்வலுவடையும்.
அமெரிக்காவும் இந்தியாவும்பல்வேறு விவகாரங்களில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கிடையே உள்ள வலுவான நட்புறவு இரு நாடுகளின் குடிமக்களுக்கு மட்டுமல்லாமல் இந்த உலக நாடுகளுக்கும் நல்லதுதான். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.