சிஏஏ எதிர்ப்புப் போராட்டம்; அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்: பிரியங்கா

உத்தரப் பிரதேசத்தில் அசம்கர் அருகே கிராமப் பகுதியில் பிரியங்கா பொதுமக்களிடையே பேசும் காட்சி | படம்: ட்விட்டர்
உத்தரப் பிரதேசத்தில் அசம்கர் அருகே கிராமப் பகுதியில் பிரியங்கா பொதுமக்களிடையே பேசும் காட்சி | படம்: ட்விட்டர்
Updated on
2 min read

உ.பி.யில் அசம்கரில் சிஏஏ போராட்டத்தின்போது அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் துணை நிற்கும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

அதனால், நாடு முழுவதும் இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உ.பியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது போலீஸ் தடியடிப் பிரயோகத்தில் ஈடுபட்டது. ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்தவாரம் அசம்கர் நகரில் சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் இந்தப் போராட்டங்களில் மக்கள் மனிதாபிமானமுற்ற முறையில் போலீஸாரால் நடத்தப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று அகிலேஷ் யாதவ்வின் தொகுதியான அசம்கருக்கு பயணம் மேற்கொண்டார்.

அசாம்கரிக்குச் சென்று சிறையில் அடைக்கப்பட்ட சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களின் குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்து பேசினார். அதன்பின்பு அசம்கர் அருகே பில்ஹாரியாகஞ்ச் வட்டாரத்திற்கு சென்றார்.

பில்ஹாரியாகஞ்ச் வட்டாரத்தில் தனது காரின் மேல் உள்ள திறந்த பகுதியிலிருந்து நின்றவாறு கூடியிருந்த மக்களிடையே காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது:

மத்திய மற்றும் உத்தரபிரதேச பாஜக அரசுகள் அரசியலமைப்பை அழிக்க முயற்சிக்கின்றன. ஜனநாயகத்தில் குரல் எழுப்புவது குற்றம் அல்ல; மாறாக உரிமைக்காக போராடுபவர்களை நசுக்குவது மிகப்பெரிய அநீதி. அமைதியான போராட்டக்காரர்களுக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும். நான் பிஜ்னோர், மீரட், முசாபர்நகர், லக்னோ மற்றும் வாரணாசி மற்றும் பிற இடங்களுக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள கிராமப்புற பெண்களிடம் பேசினேன்.

மக்கள் கூறியவற்றைக்கொண்டு எங்கள் கட்சியால் ஒரு அறிக்கை தயார்செய்யப்பட்டு தேசிய மனித உரிமை ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அசாம்கரில் நடந்த போராட்டத்தின்போது கொடுமை செய்த போலீஸ்காரர்களின் பெயர்களையும் ஆணையத்திற்கு அனுப்ப உள்ளோம். உங்களுக்கு என்ன அநீதி இழைக்கப்பட்டிருந்தாலும் அது மிகமிகத் தவறானது. நாம் அனைவரும் அநீதிக்கு எதிராக நிற்போம்.

உத்தரகண்டில் உள்ள பாஜக அரசாங்கம் இடஒதுக்கீடு ஒரு அரசியலமைப்பு உரிமை அல்ல என்று கூறுவதை இப்போது நீங்கள் பார்க்கிறீர்கள், ஒரு மாநில அரசு அரசியலமைப்பை அழிப்பது பற்றி பேசுகிறது. நீங்களும் நாங்களும் இணைந்து அதைக் காப்பாற்றவில்லை என்றால், அரசியலமைப்பு அழிக்கப்பட்டுவிடும்.

அரசியலமைப்பை மாற்றும் முயற்சிகளுக்கு எதிராக நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து எழ வேண்டும், ஏனென்றால் அவர்கள் கொண்டு வரத் திட்டமிட்டுள்ள அனைத்து சட்டங்களும் ஒரு சமூகத்திற்கு எதிரானவை அல்ல, மாறாக முழு அரசியலமைப்பிற்கும் எதிரானது.

காங்கிரஸ் கட்சி இன்று உங்களுடன் நிற்கிறது, அது நாளை உங்களுக்கு ஆதரவாக நிற்கும், உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.

இவ்வாறு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in