Last Updated : 12 Feb, 2020 02:21 PM

 

Published : 12 Feb 2020 02:21 PM
Last Updated : 12 Feb 2020 02:21 PM

கைதிகளுக்கு வாக்களிக்க உரிமை இல்லை: சட்டக் கல்லூரி மாணவர்களின் மனுவைத் தள்ளுபடி செய்த டெல்லி உயர் நீதிமன்றம்

கைதிகளுக்கு வாக்களிக்கச் சட்டத்தில் இடமில்லை என்று கூறி சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்கல் செய்த பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

நாடு முழுவதும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து நபர்களுக்கும் வாக்குரிமை அளிக்க வேண்டுமெனக் கோரி சட்டக்கல்லூரியைச் சேர்ந்த பிரவீன் குமார் சவுத்ரி, அதுல் குமார் துபே மற்றும் பிரேர்னா சிங் ஆகிய மூன்று மாணவர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள் காட்டி இம்மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர்.

இந்த மனுவை எதிர்த்து தேர்தல் ஆணையம் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், ''இந்திய அரசியலமைப்பில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 62 (5) இன் கீழ் கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்றும் அது உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது'' என்றும் தெரிவிக்கப்பட்டது.

டெல்லி உயர் நீதிமன்றம் சட்டக் கல்லூரி மாணவர்களின் மனுவை இன்று விசாரித்தது.

மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் கூறியதாவது:

''இதுகுறித்து ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. தலைமை நீதிபதி டி.என்.படேல் மற்றும் நீதிபதி சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, வாக்களிக்கும் உரிமை என்பது அனைவருக்குமான ஓர் அடிப்படை உரிமையோ அல்லது பொதுவான சட்ட உரிமையோ அல்ல. அது மக்கள் பிரதிநிதித்துவத்தின் ஒரு சட்டத்தால் மட்டுமே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இது சட்டப் பிரிவு 62இன் கீழ் உள்ள துணைப்பிரிவு (5)ன் விளைவின்படி எந்தவொரு நபரும் சிறையில் அடைக்கப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கும் போது அல்லது போலீஸ் காவலில் இருக்கும் காலகட்டங்களில் எந்தவொரு காரணத்திற்காகவும் தேர்தலில் வாக்களிக்க உரிமை இல்லை. 1997ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் ஓர் தீர்ப்பில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், எந்தவொரு தடுப்புக் காவலுக்கும் உட்படுத்தப்பட்ட ஒருவருக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது என்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்கும் உரிமை என்பது சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உரிமை ஆகும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், சட்டத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. இது சிறைகளில் இருக்கும் கைதிகளை வாக்களிக்க அனுமதிக்காது என்று உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் தெளிவாகக் கூறியுள்ளனர்.

அவ்வகையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் சட்டரீதியான நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை எடுத்துக்கொள்ள சட்டவிதிகளின்படி எந்தக் காரணமும் இல்லை என்பதால் இம்மனுவை நீதிமன்றம் நிராகரிக்கிறது''.

இவ்வாறு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x