பிப்.16-ல் அர்விந்த் கேஜ்ரிவால் பதவியேற்பு: மூன்றாவது முறையாக டெல்லி முதல்வராகிறார்

கேஜ்ரிவால் வெற்றிச் சான்றிதழைப் பெற்றபோது..
கேஜ்ரிவால் வெற்றிச் சான்றிதழைப் பெற்றபோது..
Updated on
1 min read

டெல்லி முதல்வராக வரும் பிப்ரவரி 16-ம் தேதி அர்விந்த் கேஜ்ரிவால் பதவியேற்கிறார். அவர் முதல்வர் பதவியேற்பது இது மூன்றாவது முறையாகும்.

கடந்த 8-ம்தேதி 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளைக் கைப்பற்றி அசுர பலத்துடன் அபார வெற்றி பெற்றுள்ளது. பாஜக 8 தொகுதிகளைக் கைப்பற்றியது. காங்கிரஸுக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை.

மூன்றாவது முறை..

இந்நிலையில், அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வராக மூன்றாவது முறையாகப் பதவியேற்க உள்ளார். பிப்ரவரி 16-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

முதன்முதலில் கேஜ்ரிவால் கடந்த 2013 பிப்ரவரியில் டெல்லியின் 7-வது முதல்வராகப் பதவியேற்றார். அப்போது அவருக்கு வயது 45. டெல்லியில் ஆட்சி செய்த முதல்வர்களில் கேஜ்ரிவாலே வயது குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பதவியேற்பு விழாவும் ராம் லீலா மைதானத்தில் தான் நடந்தது. ஆனால், அவரது முதல்வர் பதவி அந்தமுறை வெறும் 49 நாட்களே நீடித்தது.

அதன்பின்னர் 2015 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் மக்களை தேர்தல் களத்தில் சந்தித்தார். அத்தேர்தலில் ஆம் ஆத்மி 67 இடங்களைக் கைப்பற்றியது.

தற்போது 2020-ல் ஆட்சியைப் பிடித்து மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்கிறார். டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி சட்டமன்ற குழு கூட்டத்திற்குப் பின்னர் துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலை சந்திப்பதற்காக கேஜ்ரிவால் ராஜ் நிவாஸ் சென்றிருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in