டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றி ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு: தொண்டர் பரிதாப பலி; ஒருவர் காயம்

டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றி ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு: தொண்டர் பரிதாப பலி; ஒருவர் காயம்
Updated on
1 min read

டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றி ஊர்வலத்தில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் அக்கட்சியின் தொண்டர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஒருவர் காயமடைந்தார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 70 தொகுதிகளில் 62 தொகுதிகளைக் கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. கேஜ்ரிவால் மீண்டும் முதல்வராகிறார்.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மெஹ்ராலி தொகுதி எம்.எல்.ஏ., நரேஷ் குப்தா கோயிலுக்குச் சென்றுவிட்டு ஊர்வலமாக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டே திறந்தவாகனத்தில் திரும்பியபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதில் நல்வாய்ப்பாக நரேஷ் யாதவ் உயிர்பிழைத்தார். ஆனால், அவரது பின்னால் நின்றுகொண்டிருந்த அசோக் மான் என்ற ஆம் ஆத்மி தொண்டர் பரிதாபமாக பலியானார்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான நிலையில், குண்டு பாயும் நொடிவரை அசோக் மான் புன்னகையுடன் மக்களுக்கு வெற்றிச் சின்னத்தைக் காட்டி உற்சாகமாக பயணிப்பது தெரிகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இவர்களில் ஒருவர் போலீஸில் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அசோக் மானையும் அவரது உறவினர் ஹரீந்தரையும் கொலை செய்யும் நோக்கிலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஒப்புக்கொண்டார். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வை குறிவைத்துத் துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை என்றும் அந்த சந்தேக நபர் தெரிவித்தார்.

நான் இறந்துவிடுவேன் என்றே அஞ்சினேன்..

இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு எம்.எல்.ஏ. நரேஷ் யாதவ் அளித்த பேட்டியில், "துப்பாக்கிச் சூடு சம்பவம் சரியாக இரவு 10,30 மணிக்கு நடந்தது. சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் போலீஸார் தெளிவாக ஆராய்ந்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். இந்த தாக்குதலுக்குப் பின்னால் உள்ள காரணம் எனக்குத் தெரியாது. ஆனால், அடுத்தடுத்து 4 குண்டுகள் நான் நின்ற வாகனத்தை நோக்கிப் பாய்ந்தபோது நான் இறந்துவிடுவேன் என்றே நினைத்தேன்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in