

நிர்பயா வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீது பதில் அளிக்குமாறு 4 குற்றவாளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
டெல்லியில் நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், டெல்லி விசாரணை நீதிமன்றம் குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இரு முறை வாரண்ட் பிறப்பித்தது. ஆனால், குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக தங்கள் சட்ட வாய்ப்பை பயன்படுத்தி வருவதால் தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை.
இதனிடையே, தங்களின் மரண தண்டனையை ஒத்தி வைக்கக் கோரி குற்றவாளிகள் சார்பில் டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் அவர்களை தூக்கிலிட இடைக்கால தடை விதித்தது.
விசாரணை நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு, டெல்லி அரசு சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம், அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசும், டெல்லி அரசும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர். பானுமதி, அசோக் பூஷன், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார். வாதத்தைக் கேட்ட நீதிபதிகள் கூறும்போது, “குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்காக புதிய வாரன்ட் பிறப்பிக்கக் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகலாம். அதற்கு இந்த மேல்முறையீட்டு மனு தடையாக இருக்காது. மேலும் இந்த மனு குறித்து குற்றவாளிகள் தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
குற்றவாளிகளில் 3 பேருக்கான சட்ட வாய்ப்புகள் அனைத்தும் முடிந்துவிட்டன. எனினும் பவன் குப்தா மட்டும் தனது கடைசி சட்ட வாய்ப்பை இன்னும் பயன்படுத்தவில்லை. உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யவும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்யவும் இவருக்கு வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
வினய் சர்மா புதிய மனு
குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், “எனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார். எனவே, என்னுடைய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை அறிவிக்கக் கோரி நிர்பயா பெற்றோர் மற்றும் டெல்லி அரசு சார்பில் விசாணை நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.