

வாயுத்தலமான ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் பிரமோற்சவ விழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 29ம் தேதி வரைவிமரிசையாக நடை பெற உள்ளது.இதனையொட்டி, விழாவில் பங்கேற்கநேற்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
பஞ்சபூத திருத்தலங்களில் வாயுத்தலமாக விளங்கும் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில்வரும் 16-ம் தேதி முதல் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்க உள்ளது. பக்தனுக்கு முதல் மரியாதை அளிக்கும் விதத்தில், முதலில் பக்த கண்ணப்பர் கோயிலில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்படுகிறது.
மறுநாள் 17ம் தேதி காளஹஸ்தி கோயில் கொடிக்கம்பத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்படுகிறது. இந்த பிரம்மோற்சவ விழா, இம்மாதம் 29-ம் தேதி வரை தொடர்ந்து 14 நாட்கள் வரை நடைபெறும் இவ்விழாவில், பகல் மற்றும் இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவ மூர்த்திகளின் திருவீதி உலா நடைபெறும். மேலும், பல்வேறு கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் முக்கியமாக வரும் 21-ம் தேதி மகா சிவராத்திரியையொட்டி, அன்று மகா நந்தி வாகனமும், இரவு லிங்கோத்பவ தரிசனமும் நடைபெறும். மேலும், 22-ம்தேதி தேர்த்திருவிழா, இரவு தெப்போற்சவம், 23-ம் தேதி திருக்கல்யாணம், 27-ம் தேதி பூப்பல்லக்கு சேவை போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
பிரம்மோற்சவ விழாவினையொட்டி, காளஹஸ்தி நகரம் முழுவதும் மின் விளக்கு அலங்காரத்தால் விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கு பார்த்தாலும், அலங்கார வளைவுகள், மின் விளக்கு கட் அவுட்கள்,தோரணங்கள் என பிரம் மோற்சவ விழாகளை கட்டுகிறது. இதேபோன்று, கோயிலிலும்பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்து, வண்ணம் தீட்டும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதனால் கோயில் முழுவதும் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.
மேலும் பிரம்மோற்சவத்திற்கு வரும் பக்தர்களுக்காக தனி வரிசைகள், பிரசாத விநியோகம், அன்னதானம், குடிநீர், போக்குவரத்து, பாதுகாப்பு என அனைத்து வசதிகளையும் தேவஸ்தானம் செய்து வருகிறது.
காளஹஸ்தி சிவன் கோயில் பிரம்மோற்சவம் வரும் 16-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பிரம்மோற்சவத்துக்கு வருகை தருமாறு, காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் காளஹஸ்தி சட்டப்பேரவை உறுப்பினர் மதுசூதன் ரெட்டி, மற்றும் தேவஸ்தான முக்கிய அதிகாரிகள், அர்ச்சகர்கள் நேற்று அமராவதி சென்று, முதல்வர் ஜெகன்மோக னுக்கு அழைப்பு விடுத்தனர்.