Published : 12 Feb 2020 08:02 AM
Last Updated : 12 Feb 2020 08:02 AM

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 62 தொகுதிகளில் அபார வெற்றி: பாஜக 8 இடங்களைக் கைப்பற்றியது - காங்கிரஸுக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளைக் கைப் பற்றி அசுர பலத்துடன் அபார வெற்றி பெற்றுள்ளது. மூன்றாவது முறையாக அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வ ராக பதவி யேற்க உள்ளார். பாஜக 8 தொகுதி களைக் கைப்பற்றியது. காங்கிரஸுக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தம் 672 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாள ராக அர்விந்த் கேஜ்ரிவால் முன்னிறுத் தப்பட்டார். பாஜக, காங்கிரஸ் தரப்பில் முதல்வர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வில்லை.

தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் ஆம் ஆத்மி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பம் முதலே ஆளும் ஆம் ஆத்மி முன்னிலையில் இருந்தது.

கேஜ்ரிவால் வெற்றி

முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் சுனில் குமார் யாதவ் களமிறங்கினார். இதில் கேஜ்ரிவால் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஆம் ஆத்மி மூத்த தலைவரும் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, பட்பர்கன்ஞ் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கும் பாஜக வேட்பாளர் ரவீந்தர் சிங் நெகிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஆரம்ப கட்டத்தில் மணீஷ் சிசோடியா பின்தங்கினார். இறுதியில் 3,201 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.

காந்தி நகர், கோண்டா, காரவால் நகர், ரோதாஸ் நகர், விஷ்வாஸ் நகர், லட்சுமி நகர், ரோஹினி, பதர்பூர் ஆகிய 8 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. சில தொகுதிகளில் மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோல்வியைத் தழுவியது. காங்கிரஸ் கட்சிக்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை.

பாஜகவுக்கு பின்னடைவு

வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை ஆம் ஆத்மிக்கு 53.61%, பாஜகவுக்கு 38.52%, காங்கிரஸுக்கு 4.36 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. கடந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு 32 சதவீத வாக்குகள் கிடைத்தன. இந்த தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி 6.52 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

மக்களவைத் தேர்தலின்போது டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. ஆனால் சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜகவுக்கு 8 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. கடந்த 2015 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த முறை கூடுதலாக 5 தொகுதிகள் கிடைத்துள்ளன.

காங்கிரஸ் படுதோல்வி

கடந்த 1998 முதல் 2013 வரை அன் றைய முதல்வர் ஷீலா தீட்சித் தலைமை யில் டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. கடந்த 2013-ம் ஆண்டு நடை பெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்த லில் காங்கிரஸ் 8 தொகுதிகளைக் கைப் பற்றியது. அதன்பின் 2015 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை. தற்போதைய தேர்த லிலும் காங்கிரஸ் அதே படுதோல்வியை சந்தித்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டில் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 31, ஆம் ஆத்மி 28, காங்கிரஸ் 8 தொகுதி களைக் கைப்பற்றின. அப்போது காங் கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது. முதல்முறையாக அர்விந்த் கேஜ்ரிவால் முதல்வராகப் பதவியேற்றார். காங்கிரஸுடன் ஏற்பட்ட கருத்து வேறு பாட்டால் 49 நாட்களுக்குப் பிறகு அவர் பதவி விலகினார். அதன்பின் கடந்த 2015-ம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்த லில் 67 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது 2-வது முறையாக கேஜ்ரிவால் முதல்வர் பதவியை ஏற்றார். தற்போது 3-வது முறை யாக கேஜ்ரிவால் முதல்வர் பதவியை ஏற்க உள்ளார்.

கேஜ்ரிவாலின் மனைவி சுனிதாவுக்கு நேற்று 54-வது பிறந்த நாளாகும். தேர்தல் வெற்றி மற்றும் மனைவியின் பிறந்த நாளை கேஜ்ரிவால் உற்சாகமாகக் கொண்டாடினார்.

டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்தில், அர்விந்த் கேஜ்ரிவால் போன்று உடையணிந்த சிறு வன், தேர்தல் வெற்றி கொண்டாட்டத் தில் பங்கேற்றான். அந்த சிறுவன், கேஜ்ரி வாலை போன்று தொப்பி, மூக்கு கண்ணாடி, மப்ளர் அணிந்திருந்தான். இந்த படத்தை ஆம் ஆத்மி ட்விட்டரில் வெளியிட்டது.

தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் கேஜ்ரிவால் கூறியதாவது:

இது என்னுடைய வெற்றி கிடையாது. டெல்லி மக்களின் வெற்றி. என்னை தங்கள் குடும்பத்தில் ஒருவனாக நினைத்து மக்கள் வாக்களித்துள்ளனர். இது டெல்லியின் வெற்றி மட்டுமல்ல. ஒட்டு மொத்த இந்தியாவின் வெற்றி. வளர்ச் சியை முன்னிறுத்தி ஆம் ஆத்மியை மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர். கடவுள் அனுமன் நம்மை ஆசீர்வதித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சி சிறப்பாக நடைபெற கடவுளை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து கேஜ்ரி வால், அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் டெல்லி கனாட் பிளேஸில் உள்ள அனுமன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.

பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மிக்கும் அர்விந்த் கேஜ்ரிவாலுக் கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள் கிறேன். டெல்லி மக்களின் விருப்பங்களை ஆம் ஆத்மி நிறைவேற்ற வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறும் போது, "மக்களின் தீர்ப்பை பாஜக ஏற்றுக் கொள்கிறது. டெல்லி சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம். டெல்லி மக்களுக்காக குரல் கொடுப்போம். ஆம் ஆத்மி அரசு டெல்லியை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தும் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ கூறும்போது, "தேர்தலின்போது பிர தமர் நரேந்திர மோடியும் பாஜக தலைவர் களும் ‘வெறுப்பு அரசியல்' பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு டெல்லி மக்கள் தகுந்த பாடம் கற்பித்துள்ளனர். மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம். டெல்லி காங்கிரஸுக்கு புத்துயிரூட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

ஆம் ஆத்மியின் தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டார். தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக வாக்களித்த டெல்லி மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். மொத்த தொகுதிகள்70ஆம் ஆத்மி62பாஜக8காங்கிரஸ்0

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x