

டெல்லி தேர்தலில் மக்களின் செல்வாக்கைப் பெற்று, நல்லாட்சி கொடுத்ததன் பயனாக அரவிந்த் கேஜ்ரிவால் மீண்டும் முதல்வராகிறார் என்று அரசியல் வல்லுநர்கள் உட்பட அனைவரும் கூறி வரும் நிலையில், ‘ஹனுமான்’ இல்லாவிட்டால் கேஜ்ரிவால் வெற்றி பெற்றிருக்க மாட்டார் என்று ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் கூறியிருக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறியதாவது:
கேஜ்ரிவால் டெல்லி தேர்தலில் வெற்றி பெறக் காரணம் ஹனுமன் தான். ஹனுமன் சாலிஸாவை அவர் பாராயணம் செய்ததால்தான், அதனால் ஹனுமன் கடவுள்தான் அவரை வெற்றி பெறச் செய்துள்ளார், இல்லையெனில் அவர் வெற்றி பெற்றிருக்க முடியாது.
ஹனுமானை அவர் முதல் முறையாக நினைவில் கொண்டார். ஹனுமன் சாலிசாவை அவர் பாராயணம் செய்தார். அதனால் வாயுபுத்திரனின் கடாட்சம் அவருக்குக் கிடைத்தது” என்றார்.
உடனே செய்தியாளர்களில் சிலர், ‘ஜெய்ஸ்ரீராம்’ சொல்லியும் பாஜகவினால் ஏன் வெற்றி பெற முடியவில்லை? என்றனர், அதற்கு அவர், லோக்சபா தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெற கட்சித் தொண்டர்கள் பகவான் ராமர் பெயரைச் சொன்னதால்தான் என்றார்.
கேஜ்ரிவால் வெற்றிக்குப் பிறகு கனாட் பிளேசில் உள்ள ஹனுமார் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். கேஜ்ரிவாலுடன் அவரது குடும்பத்தினரும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் சென்றனர்.