Published : 11 Feb 2020 03:10 PM
Last Updated : 11 Feb 2020 03:10 PM

கேஜ்ரிவாலுக்கு கைகொடுத்த கல்வி, மாநில உரிமை

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு கிடைத்தால் இலவச மின்சாரம், 24 மணிநேரக் குடிநீர், ஒவ்வொரு மாணவருக்கும் உலகத்தர கல்வி என்பது உள்ளிட்ட பத்து அம்ச உத்தரவாதத்தை கேஜ்ரிவால் வழங்கியுள்ளார். அதில் முக்கியமானது கல்வி.

டெல்லியில் கல்வியைத் தொடர முடியாதவர்களின் விகிதத்தைக் குறைக்க கேஜ்ரிவால் அரசு, 2016-ம் ஆண்டு ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கல்வியில் பின்தங்கியவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கல்வித்துறை பொறுப்பையும் கவனிப்பதால் பள்ளிகளிலும் கல்வித்துறை அலுவலகங்களிலும் அடிக்கடி அவர் திடீர் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டார். அரசுப் பள்ளி ஆசிரியர்களை, பொறுப்புடன் நடந்துகொள்ளத் தூண்டும் வகையில் சில நடவடிக்கைகளை சிசோடியா மேற்கொண்டார். இது பெற்றோர்கள் இடையே வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

டெல்லியில் பள்ளிக் கல்வியை பெரும் சாதனையாக முதல்வர் கேஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைத்தார். இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரச்சாரத்தின்போது கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக அமித் ஷா கூறுகையில் ‘‘டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் 500 பள்ளிக்கூடங்கள் கட்டுவேன் என்று உறுதியளித்திருந்தார். பள்ளிக்கூடங்களும் கட்டவில்லை, ஏற்கெனவே இருக்கும் பள்ளிக்கூடங்களும் மோசமான நிலையில் இருக்கின்றன.

700 பள்ளிக்கூடங்களில் தலைமை ஆசிரியர்களே இல்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் அறிவியல் குறித்த சோதனைக் கூடங்கள் இல்லை. 19 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருக்கிறார்கள். கேஜ்ரிவால் அரசு கல்விக்காக பட்ஜெட்டில் 30 சதவீதம்கூட செலவிட முடியவில்லை" என விமர்சித்திருந்தார்.

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் விமர்சனத்துக்குப் பதிலடி தரும் வகையில் கேஜ்ரிவால் ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டார்.

அதில், "உங்களின் மோசமான அரசியலின் ஒரு பகுதியாகக் கல்வியை மாற்றாதீர்கள். தயவுசெய்து சிறிது நேரம் ஒதுக்கி என்னுடன் வந்து அரசுப் பள்ளிகளைப் பாருங்கள். உங்களைச் சுற்றி எதிர்மறையான எண்ணம் நாடு முழுவதும் சூழ்ந்துள்ளது.

என்னுடன் வந்து எங்கள் மாணவர்களைச் சந்தித்துப் பேசுங்கள். அப்போது உங்களுக்கு நேர்மறையான எண்ண அலைகள், எண்ண ஓட்டங்கள் கிடைக்கும். கல்வியில் தயவுசெய்து ஆக்கபூர்வமான, நேர்மறையான அரசியலை நடத்துங்கள். டெல்லி அரசுப் பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களின் கடின உழைப்பை விளையாட்டாகச் சித்தரிக்காதீர்கள்" எனத் தெரிவித்தார்.

மாநில உரிமை

இதுமட்டுமின்றி டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து தேவை என்ற கேஜ்ரிவாலின் முழக்கம், மத்திய அரசுடன் போராடும் அவரது இயல்பு டெல்லி மக்களைப் பெரிதும் கவர்ந்தது. துணைநிலை ஆளுநர் பிறப்பிக்கும் உத்தரவுகளை ஏற்க மறுப்பது, அதிகாரிகளின் பணி ஆணையை நிராகரிப்பது என நேரடியாக மோதல் களத்தில் குதித்த கேஜ்ரிவால், பிறகு நீதிமன்றத்துக்கும் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x