Published : 11 Feb 2020 02:37 PM
Last Updated : 11 Feb 2020 02:37 PM

சலுகை விலையில் குடிநீர், மின்சாரம்: டெல்லி மக்களைக் கவர்ந்த கேஜ்ரிவால்

புதுடெல்லி

முதல்வர் கேஜ்ரிவால் டெல்லி மக்களுக்குச் சலுகை விலையில் குடிநீர் மற்றும் மின்சாரம் வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றது.

டெல்லியில் கேஜ்ரிவால் அரசு குடிநீர் கட்டணத்தில் நிலுவைக் கட்டணத் தள்ளுபடி சலுகையை அறிவித்தது. இதனால் ஆம் ஆத்மி கட்சி, மீண்டும் மக்களின் பெரும் கவனத்தைப் பெற்றது.

குடிநீர் கட்டணத் தள்ளுபடி

குடிநீர் விநியோக அளவைக் கணக்கிடும் மீட்டர்களைப் பொருத்தினால் தள்ளுபடி சலுகையைப் பெறலாம் என்ற அறிவிப்பின் மூலம் 13 லட்சம் வீட்டு உரிமையாளர்கள் பயன் பெற்றனர்.

குடிநீர் கட்டணத்தைப் பொறுத்தவரையில் ஏ, பி பிரிவுகளில் உள்ளவர்களுக்கு 25 சதவீதமும், பி பிரிவில் உள்ள உரிமையாளர்களுக்கு 50 சதவீதமும், இ, எஃப், ஜி, எச் பிரிவுகளில் உள்ளவர்களுக்கு நிலுவைக் கட்டணத்தில் 100 சதவீத தள்ளுபடியும் வழங்கப்பட்டது. டெல்லியில் வாடகைதாரர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களிடமும் இந்தத் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், தேர்தலை மனதில் வைத்து இத்திட்டம் அமல்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சியான பாஜக குற்றம் சாட்டியது.

மின்சாரம் சலுகை

இதுபோலவே மின்சாரக் கட்டணத்திலும் சலுகை அறிவிப்புகளை டெல்லி அரசு வெளியிட்டது. டெல்லியில் மின் விநியோகத்தை பிஎஸ்இஎஸ் ராஜ்தானி, பிஎஸ்இஎஸ் யமுனா, டாடா மின் விநியோக நிறுவனம் ஆகியவை மேற்கொண்டு வருகின்றன.

முதல் 200 யூனிட்டுகள் மின்சாரப் பயன்பாடு இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டார் கேஜ்ரிவால். 201 முதல் 400 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு கட்டணத்தில் 50 சதவீதத் தள்ளுபடியும் வழங்கப்பட்டது. ஆனால், இது தேர்தலுக்கான வெற்று அறிவிப்பு, இதனால் எந்தப் பயனும் இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இருந்தபோதிலும் குடிநீர் மற்றும் மின்சாரக் கட்டணத்தில் சலுகை வழங்கியது டெல்லி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x