Published : 11 Feb 2020 09:41 AM
Last Updated : 11 Feb 2020 09:41 AM

ஆம் ஆத்மியிலிருந்து கட்சி மாறியவர்களுக்குப் பின்னடைவு 

கபில் மிஸ்ரா, அல்கா லம்பா | கோப்புப் படம்.

ஆம் ஆத்மியிலிருந்து கட்சி மாறிய அல்கா லம்பா, கபில் மிஸ்ரா ஆகியோர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாயின.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பிற்பகலில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

70 தொகுதிகளில் தற்போது 53 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 17 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கேஜ்ரிவால் முன்னிலை வகித்து வருகிறார். பட்பர்கஞ்ச் தொகுதியில் மணீஷ் சிசோடியா முன்னிலையில் உள்ளார்.

அல்கா லம்பா பின்னடைவு

டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் அல்கா லம்பா. கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சி நடவடிக்கையில் இருந்து சிறிது காலம் விலகியிருந்தார். ஆம் ஆத்மி கட்சியை விட்டு விலகிவிட்டதாக கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதன் அடிப்படையில் அல்கா லம்பாவை சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த தகுதி நீக்கம் செப்டம்பர் 6-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில் அவர் கடந்த அக்டோபர் மாதம் முறைப்படி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். டெல்லியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அல்கா லம்பா, சாந்தினி சோக் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி அல்கா லம்பா பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

கபில் மிஸ்ரா பின்னடைவு

அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசில் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கபில் மிஸ்ரா. இவர் 2017-ம் ஆண்டு மே மாதம் 6-ம் தேதி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து, கேஜ்ரிவால் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக கபில் மிஸ்ரா குற்றம் சாட்டினார். அதன்பின் பாஜகவில் இணைந்த கபில் மிஸ்ரா மாடல் டவுன் தொகுதியில் போட்டியிட்டார். தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி கபில் மிஸ்ரா பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள்

டெல்லியில் கடந்த 2015-ம் ஆண்டு தேர்தலைப் போலவே இம்முறை மும்முனைப் போட்டி நிலவியது. ஆளும் ஆம் கட்சி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி இருந்தது. டெல்லியில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. இங்கு ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. என்றாலும் அக்கட்சி கடந்த தேர்தலை விட இம்முறை குறைந்த தொகுதிகளையே கைப்பற்றும் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

வாக்கு எண்ணிக்கை நிலவரம் மற்றும் முடிவுகளை தேர்தல் ஆணையம் eciresults.nic.in, eci.gov.in மற்றும் results.eci.gov.in. இணைய தளங்களில் வெளியிடுகிறது. தேர்தல் ஆணையத்தின் ட்விட்டர் பக்கத்திலும் முன்னணி நிலவரம் வெளியாகி வருகிறது.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x