

துபாயிலிருந்து இந்தியாவுக்கு கடத்தப்பட்டு வந்த ரூ.24 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை மும்பை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கள்ள நோட்டுகள் கடத்தப்படவுள்ளதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன் பேரில், அந்த விமான நிலையத்தில் போலீஸார் நேற்று முன்தினம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது விமான நிலையத்திலிருந்து ஒரு நபர் அவசர அவசரமாக வெளியேற முயன்றார். சந்தேகத்தின் பேரில் அந்த நபரை மடக்கி சோதனை செய்தனர். சுமார் ஒரு மணிநேர சோதனைக்கு பிறகு, அவரது பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.24 லட்சத்தை போலீஸார் கண்டறிந்தனர். அவைஅனைத்தும் 2 ஆயிரம் நோட்டுகளாக இருந்தன. அவற்றை ஆய்வுசெய்ததில் கள்ள நோட்டுகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் ஜாவீத்ஷேக் (36) என்பதும், மகாராஷ்டிராவின் தாணே மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
மேலும், இந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை என ஜாவீத்ஷேக் வாக்குமூலம் அளித்துள்ளதாக மும்பை காவல் இணை ஆணையர் சந்தோஷ் ரஸ்டோகி தெரிவித்துள்ளார். தீவிரவாத இயக்கங்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ள நோட்டை அறிவது எப்படி?
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் உண்மைத் தன்மையை கண்டறிவது தொடர்பாக போலீஸார் 9 வழிமுறைகளை தெரிவித்துள்ளனர்.
1. மகாத்மா காந்தி புகைப்படத்தின் இடதுபக்கத்தில் கறுப்பு நிறத்திலான சிறு சிறு கட்டங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.
2. வலதுபுறத்தில் மகாத்மா காந்தியின் புகைப்படம் மங்கலாக தெரியும்.
3. நோட்டின் மேற்புறத்தில் காந்தியடிகளின் புகைப்படத்துக்கு நடுவே மிக நுண்ணிய எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கும்.
4. நோட்டின் கீழ்புறத்தில் இடது ஒரம் சிறியதாக எழுத்துகள் இருக்கும். கண்களுக்கு நேராக நோட்டை வைத்து பார்த்தால் அந்த எழுத்துகளை காணலாம்.
5. நோட்டின் கீழே வலது ஓரத்தில் உள்ள சிங்க இலச்சினைக்கு மேலே அடையாள குறிகள் இடப்பட்டிருக்கும். இதுபிரெய்லிமுறையில் பொறிக்கப்பட்டிருக்கும்.
6. நோட்டின் மேல் இடது ஓரத்தில் அசோக சக்கரம் செதுக்கப்பட்டது போல வரையப்பட்டிருக்கும்.
7. நோட்டுக்கு கீழ் வலது ஓரத்தில் இருக்கும் 2000 என பொறிக்கப்பட்டிருப்பதில் குறிப்பிட்ட சில எண்கள் மட்டும் வேறு வேறு வண்ணத்தில் பொறிக்கப்பட்டிருக்கும்.
8. நோட்டின் இடது பக்கத்தின் மையத்தில் எண்கள் அச்சிடப்பட்டிருக்கும். மின்விளக்குக்கு எதிரே நோட்டை வைத்து பார்த்தால் அந்த எண்கள் தெரியும்.
9. நோட்டின் வலதுபுறத்துக்கு கீழே ஒளிரும் மையால் எண்கள் பொறிக்கப்பட்டிருக்கும். புற ஊதா விளக்கின் வெளிச்சத்தில் மட்டுமே இது தெரியும்.