

‘‘ஷீனா போரா புதைக்கப்பட்ட இடத்தை முதன்முதலில் நான் பார்த்தபோது, அங்கு வெறும் எலும்புக் கூடுதான் இருந்தது’’ என்று கிராம அதிகாரி பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு ஷீனா போராவின் சடலம் மும்பை அருகே உள்ள ராய்கட் வனப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் சடலம் புதைக்கப்பட்ட இடத்தைக் கண்டுபிடிக்க போலீஸுக்கு, ராய்கட் மாவட்டத்தில் உள்ள ஹெடேவ்னி கிராம ‘போலீஸ் பாட்டில்’ கணேஷ் தினே உதவியுள்ளார்.
இதுகுறித்து தினே நேற்று கூறும்போது, “கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் 23-ம் தேதி வனப் பகுதியில் மாங்காய் பறிக்கச் சென்றேன். அங்கு ஷீனா போரா புதைக்கப்பட்ட இடத்தை முதலில் பார்த்தபோது, அங்கு வெறும் எலும்புகள்தான் இருந்தன. உடலில் சதை எதுவும் இல்லை. சூட்கேஸில் ஷீனா உடல் இல்லை. உடல் புதைக்கப்பட்ட இடத்தைச் சுற்றி எரிக்கப்பட்டிருந்தது. ஷீனா உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தார்களா என்று தெரியவில்லை. மாமரத்துக்கு அருகில் ஷீனா உடல் புதைக்கப்பட்டிருந்ததால், எனக்கு அடையாளம் சரியாக தெரிந்தது” என்றார்.
இந்நிலையில், தினே அடையாளம் காட்டிய இடத்தில், மும்பை போலீஸார் மற்றும் தடயவியல் நிபுணர்கள், ஷீனா போராவின் உடலை கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் தோண்டி எடுத்தனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
பாம்பே கிராம போலீஸ் சட்டத்தின் கீழ், ‘போலீஸ் பாட்டில்’ என்ற பதவி உருவாக்கப்பட்டது. போலீஸ் துறை மற்றும் தாலுகா மாஜிஸ்திரேட்டின் நேரடி கண்காணிப்பின் கீழ் இவர்கள் பணியாற்றுகின்றனர். போலீஸ் பாட்டில் பதவி வகிப்பவர், தங்கள் கிராமத்துக்குட்பட்ட பகுதியில் குற்றங்கள் நிகழ்ந்தால், அதுபற்றி உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவிப்பார்கள். அதன்பிறகு விசாரணைக்கு உதவி செய்வது, குற்றவாளிகளை பிடிப்பதற்கு உதவி செய்வது போன்ற பணிகளை இவர்கள் செய்வார்கள். அதுபோல் போலீஸ் பாட்டில் பதவி வகிப்பவர்தான் கணேஷ் தினே என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசை காட்டினார்
மகள் ஷீனாவையும் மகன் மைக்கேலையும் கொன்றுவிட்டு, கணவர் பீட்டரின் சொத்துக்களை அனுபவிக்கலாம் என தனது 2-வது கணவர் சஞ்சீவ் கண்ணாவுக்கு ஆசை காட்டியுள்ளார் இந்திராணி என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறியிருப்பதாவது: ஷீனாவையும் மைக்கேலையும் கொலை செய்ய முதலில் தயங்கியிருக்கிறார் சஞ்சீவ் கண்ணா. ஆனால், அவருக்கு பணத்தாசை காட்டியிருக்கிறார் இந்திராணி. இவர்கள் இருவருக்கும் பிறந்த வித்தியை பீட்டர் தத்தெடுத்திருக்கிறார். இந்நிலையில், ஷீனாவும், மைக்கேலும் இருந்தால் சொத்தில் பங்கு கேட்பார்கள். அவர்களை தீர்த்துக் கட்டிவிட்டால், பீட்டரின் சொத்துக்களை நாமே அனுபவிக்கலாம் என சஞ்சீவ் கண்ணாவிடம் கூறியிருக்கிறார். அதற்கு பின்னரே கொலைத் திட்டத்துக்கு சம்மதித்திருக்கிறார் அவர்.
மேலும் அசாமில் உள்ள இந்திராணியின் சில குடும்பச் சொத்துக்கள் ஷீனாவின் பெயரில் இருந்துள்ளது. அவர் இல்லை யென்றால் அந்த சொத்துக்களை சஞ்சீவ் கண்ணா எடுத்துக் கொள்ளலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியிருக்கிறார் இந்திராணி.
பொய் மேல் பொய்
ஷீனா கொலைக்கு பிறகு, ராகுலுக்கும் தந்தை பீட்டருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது.
இதையடுத்து, ராகுல் சொந்த ஊரான டேராடூனுக்கு சென்றுவிட்டார். ஷீனாவைக் காணவில்லையே எங்கே போனார் என ராகுல் இந்திராணியிடம் கேட்டிருக்கிறார். அப்போது அவர் அமெரிக்கா சென்று விட்டார். இனி திரும்ப வர மாட்டார் என கூறியிருக்கிறார் இந்திராணி.
அப்போது, ஷீனாவின் பாஸ்போர்ட் ராகுலிடம்தான் இருந்திருக்கிறது. பாஸ்போர்ட் தன்னிடம் இருக்கும் போது, ஷீனா எப்படி வெளிநாடு சென்றிருக்க முடியும் என சந்தேகத்தோடு கேட்டிருக்கிறார் ராகுல். ஷீனாவிடம் இரண்டு பாஸ்போர்ட் இருக்கிறது.
அதனால் இன்னொரு பாஸ்போர்ட் மூலம் அவர் வெளிநாடு சென்று விட்டார் என பொய் சொல்லி சமாளித்திருக்கிறார் இந்திராணி. இதுவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மனநோயாளியாகக் காட்ட முயற்சி
ஷீனாவைக் கொன்ற பிறகு, அவரைக் காணவில்லை என மகன் மைக்கேல் போலீஸில் புகார் கொடுத்தால், பிரச்சினை வரும் என்பதால், அவரை மனநோயாளியாகக் காட்ட முயன்றதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஷீனாவை தீர்த்துக் கட்டிவிட்டால், அதோடு பிரச்சினை தீராது. அவர் எங்கே என மைக்கேல் தேடுவார், போலீஸில் புகார் கொடுப்பாரே என பயந்திருக்கிறார் இந்திராணி. இதை எப்படி சமாளிப்பது என யோசித்தவர், மைக்கேலை மனநிலை பாதித்தவர் போல காட்ட திட்டமிட்டுள்ளார்.
இதற்காக ஒரு மனநல மருத்துவரிடம் சான்றிதழ் வாங்க முயன்றுள்ளார். அந்த மருத்துவரிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர் போலீஸார். ஏற்கெனவே ஒருமுறை இந்திராணிக்கும் மைக்கேலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஷீனாவும் தானும் உடன் பிறந்தவர்கள் அல்ல, இந்திராணிக்கு பிறந்த பிள்ளைகள் என பீட்டரிடம் சொல்லப் போவதாக மிரட்டியிருக்கிறார் மைக்கேல். பயந்துபோன இந்திராணி, மைக்கேலின் நடத்தை, வழக்கத்துக்கு மாறாக இருப்பதாகக் கூறி, அவரை மறுவாழ்வு மையத்தில் சேர்த்திருக்கிறார்.