தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சு குறித்து கருத்து கேட்க காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு பாகிஸ்தான் அழைப்பு: இந்தியா கடும் அதிருப்தி

தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சு குறித்து கருத்து கேட்க காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு பாகிஸ்தான் அழைப்பு: இந்தியா கடும் அதிருப்தி
Updated on
2 min read

டெல்லியில் அடுத்த வாரம் இந்தியா - பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் நிலையில் பேச்சு நடைபெறவுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஸ் அஜீஸுடன் ஆலோசனை நடத்த காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு பாகிஸ் தான் தூதரகம் அழைப்பு விடுத் துள்ளது.

ஹுரியத் மாநாட்டு அமைப்பின் இரு கோஷ்டி பிரிவுகளின் தலை வர்கள் உள்ளிட்ட பிரிவினைவாத தலைவர்களை பாகிஸ்தான் தூதரகம் சந்திப்புக்கு அழைத்துள் ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையால் இந்தியா கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

பிரிவினைவாதிகளுடன் பாகிஸ் தான் பாதுகாப்பு ஆலோசகர் சந்தித்துப்பேசினால் அதற்கு உரிய பதிலளிக்கும் வகையில் இந்தியா செயல்படும். பாகிஸ்தானில் உள்ள சில பிரிவினர் இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சு நடத்துவதை விரும்பாமல் அதனை சீர்குலைக்க விரும்புகின்றனர்.

இந்திய எதிர்ப்பு நடவடிக்கை களை தீவிரப்படுத்தி தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் நிலை யில் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள ஆலோசனைக் கூட்டத்தை இந்தியா திரும்பப் பெறச்செய்யும் நிர்பந்த நிலையை உருவாக்க முயற்சிக்கின்றனர். பிரிவினைவாதிகளுக்கு பாகிஸ் தான் அழைப்பு விடுத்துள்ளது ஆத்திரப்படுத்தும் செயல் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஸ் அஜீஸுடன் ஆலோசனை நடத்தவரும்படி சையது அலி ஷா கிலானிக்கு அழைப்பு வந்துள்ளதாக கிலானி தலைமையிலான ஹுரியத் மாநாட்டு அமைப்பின் செய்தித்தொடர்பாளர் அயாஸ் அக்பர் உறுதி செய்தார். அழைப்பை ஏற்பதா நிராகரிப்பதா என்பதை ஹுரியத் மாநாடு கூடி முடிவு செய்யும் என்றும் அக்பர் தெரிவித்தார்.

காஷ்மீர் பிரச்சினை சேர்க்கப் படாவிட்டால் இந்தியாவுடன் பேச்சு இல்லை என்பதை பாகிஸ்தான் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் பாகிஸ்தானின் இந்த அழைப்பு வரவேற்கத்தக்கது என்றும் அக்பர் கூறினார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவலுடன் பேச்சு நடத்த வரும் 23-ம் தேதி அஜீஸ் டெல்லிக்கு வரவுள்ளார். அப்போது அஜீஸுடன் ஆலோசனை நடத்தவரும்படி ஹுரியத் மாநாட்டு அமைப்பின் மிதவாதப் பிரிவு தலைவர் மிர்வைஸ் உமர் பரூக்குக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவினரும் இதுபற்றி பேசி விரைவில் முடிவு அறிவிக்க உள்ளனர்.

கடந்த ஆண்டில் இரு நாடுகளின் வெளியுறவு செயலர்கள் நிலையில் பேச்சு நடக்க இருந்த நிலையில், அதற்கு முன்பாக பிரிவினைவாத தலைவர்களுடன் ஆலோசனை நடத்த பாகிஸ்தான் தூதர் அழைப்பு விடுத்ததால் வெளியுறவு செயலர்கள் ஆலோசனை கூட்டத்தை இந்தியா ரத்து செய்தது.

டெல்லியில் ஆகஸ்ட் 23, 24-ம் தேதிகளில் அஜீஸுடன் தோவல் பேச்சு நடத்த உள்ளார். ரஷ்யாவின் உபா நகரில் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் சந்தித்துப் பேசியபோது பாதுகாப்பு ஆலோசகர்கள் நிலையில் பேசுவது என முடிவானது. பாகிஸ்தானிலிருந்தே தீவிரவாத செயல்கள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன என்பதற்கான வலுவான ஆதாரங்களை இந்த சந்திப்பில் இந்தியா வழங்க உள்ளது.

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர், ஜம்மு காஷ்மீர் உதம்பூரில் நடந்த தாக்குதல் ஆகியவற்றில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என்பதற்கான ஆதாரங்கள் மேலும் வலு சேர்த்துள்ளது.

காஷ்மீரின் உதம்பூர் அருகே எல்லை பாதுகாப்புப் படை பஸ் மீது தாக்குதல் நடத்திய போது பாகிஸ்தான் தீவிரவாதி உஸ்மான் பிடிபட்டார். அவர் பிடிபட்டதன் மூலம் இந்தியாவுக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகளை அனுப்பி வருகிறது என்பதற்கு அசைக்கமுடியாத ஆதாரமாக உள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பைஸராபாத் பகுதியைச் சேர்ந்தவர் உஸ்மான். தான் பாகிஸ்தான் நாட்டவர் என்பதையும் தீவிரவாத தாக்குதல் நடத்த இந்தியாவுக்குள் ஊடுருவியதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in