கரோனா வைரஸ்: 'உங்களுக்கு உதவ நாங்கள் தயார்'; சீன அதிபருக்கு பிரதமர் மோடி கடிதம்

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின் பிங் : கோப்புப்படம்
பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின் பிங் : கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா வைரஸ் பாதிப்புக்காக உங்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.

சீனாவை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு இதுவரை அங்கு 800-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளார்கள், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார். 25 நாடுகளுக்கும் மேலாக அந்த வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உயிர்ப்பலியும், வைரஸ் தொற்றுக்கு ஆளாகுபவர்களும் அதிகரித்துக்கொண்டே வருகின்றனர்.

இந்த சூழலில் சீனாவில் தங்கிப் பயின்று வந்த 634 இந்தியர்கள் கடந்த வாரம் 2 ஏர் இந்தியா விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு அழைத்துவரப்பட்டனர். இதற்குச் சீன தூதரகம், அதிகாரிகள் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

இந்நிலையில், சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள உதவத் தயாராக இருக்கிறோம் எனக் கூறி சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த கடிதத்தில் " சீனாவில் கரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் சூழலில் அதிபருக்கு இந்தியா துணையாக இருக்கும் என்று பிரதமர் மோடி ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், சீனா சந்திக்கும் சவால்களுக்கு உதவ இந்தியா தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருக்கிறது என்று உறுதியளித்த பிரதமர் மோடி, இதுவரை உயிரிழந்த மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்த 650 இந்தியர்களை ஹூபே மாநிலத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்ற உதவிய அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார் " எனக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in