Last Updated : 09 Feb, 2020 03:38 PM

 

Published : 09 Feb 2020 03:38 PM
Last Updated : 09 Feb 2020 03:38 PM

கடந்த 22 ஆண்டுகளில் டெல்லி சட்டப்பேரவைக்கு 31 பெண் எம்எல்ஏக்கள் மட்டுமே தேர்வு

சுஷ்மா சுவராஜ், ஷீலா தீட்சித் : கோப்புப்படம்

புதுடெல்லி

டெல்லியி்ல் கடந்த 22 ஆண்டுகளில் அதாவது 1993-ம் ஆண்டில் இருந்து 31 பெண் எம்எல்ஏக்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் 20 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நேற்று தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது.

டெல்லிக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கத் தொடங்கிய கடந்த 1993-ம் ஆண்டில் இருந்து இப்போது வரை மொத்தம் 31 பெண் எம்எல்ஏக்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதில் 1993, 1998-ல் பாஜக சார்பில் ஒரு பெண் எம்எல்ஏ மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த இரு ஆண்டுகளில் எந்த கட்சியிலும் பெண் எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்படவில்லை. கடந்த 1993-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் 3 பெண் எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

காங்கிரஸ் கட்சி சார்பில் கிருஷ்ணா திராத், தாஜ்தர் பாபர் ஆகிய இரு பெண்களும் பாஜக சார்பில் பூர்ணிமா சேதி ஆகியோரும் தேர்வானார்கள். இதில் திராத் தற்போது படேல் நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

1998-ம் ஆண்டு சட்டப்பேரவையின் போது, முதல்முறையாக டெல்லிக்கு பெண் ஒருவர் வந்தார். இந்த சட்டப்பேரவையில்தான் அதிகமாக 9 பெண் எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஷீலா தீட்சித் உள்பட 8 பேர் காங்கிரஸ் கட்சி சார்பிலும், ஒருவர் பாஜகவின் சுஷ்மா சுவராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுஷ்மா சுவராஜுக்குப்பின் இதுவரை பாஜக சார்பில் எந்த பெண் எம்எல்ஏக்களும் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1998-ம் ஆண்டில் பாஜக சார்பில் சுஷ்மா சுவராஜ் முதல்வராகப் பதவி ஏற்று சில மாதங்கள் மட்டுமே இருந்தார். அதன்பின் வெங்காய விலை ஏற்றம் காரணமாகப் பதவியில் இருந்து விலக நேர்ந்தது. டெல்லியின் முதல் பெண் முதல்வர் என்ற பெயர் இன்றும் சுஷ்மா சுவராஜுக்கு உண்டு.
அடுத்து 2-வது முதல்வராகக் காங்கிரஸ் கட்சி சார்பில் ஷீலா தீட்சித் முதல்வராகினார்.ஆனால், கடந்த ஆண்டு, சுஷ்மா சுவராஜும், ஷீலா தீட்சித்தும் கடந்த 2019-ம் ஆண்டு காலமாகினர் என்பது குறிப்பிடத்தக்கது

2003-ம் ஆண்டு 3-வது சட்டப்பேரவையில் 7 பெண் எம்எல்ஏக்கள் தேர்வு காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டனர். 2008-ம் ஆண்டு 4-வது சட்டப்பேரவையில் 3 பெண் எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்பட்டனர், இவர்கள் அனைவருமே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

கடந்த 2012- ஆண்டு தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி உதயமாகி, 2013-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டது. இந்த கட்சியின் சார்பில் வீணா ஆனந்த், ராகிபிர்லா, பந்தனா குமாரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைத்த போதிலும் 49 நாட்களில் ஆட்சி கவிழ்ந்தது.

அல்கா லம்பா : கோப்புப்படம்

கடந்த 2015-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 6 பெண் எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 6 பேருமே ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள். ராகிபிர்லா, பந்தனா குமாரி, அல்கா லம்பா, பவானாகவுர், பர்மிலா தோகாஸ், சரிதா சிங் ஆகியோர் தேர்வானார்கள்.

ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அல்கா லம்பா மாறியதால், அவரின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டது.

கடந்த 22 ஆண்டுகளில் இதுவரை 31 பெண் எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் கூட சுயேட்சை பெண் எம்எல்ஏக்கள் இல்லை.

2020-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 79 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.இதில் காங்கிரஸ், பாஜக, ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் மொத்தம் 24 பேர் போட்டியிடுகின்றனர். இதில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பது வரும் 11-ம் தேதி தெரியும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x