Last Updated : 09 Feb, 2020 12:05 PM

 

Published : 09 Feb 2020 12:05 PM
Last Updated : 09 Feb 2020 12:05 PM

ஆர்எஸ்எஸ் முதுபெரும் தலைவர் பி.பரமேஸ்வரன் காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்

ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவரும், தீவிர தொண்டரும், பாரதிய ஜன சங்கத்தின் முன்னாள் தலைவருமான பி.பரமேஸ்வரன் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 91

கேரளாவின் பாலக்காடு மாவட்டம், ஓட்டப்பாலத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பரமேஸ்வரன் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார் என ஆர்எஸ்எஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

பாரதிய விசாரா கேந்திரத்தை உருவாக்கி, அதன் இயக்குநராக இருந்தவர் பரமேஸ்வரன். ஜனசங்கம் இருந்த காலத்தில் மூத்த தலைவர்களான தீனதயால் உபாத்யாயா, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோருடன் இணைந்து பரமேஸ்வரன் பணியாற்றியுள்ளார்.

பரமேஸ்வரனுக்கு கடந்த 2004-ம் ஆண்டு இவரின் சேவையைப் பாராட்டி மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பத்ம ஸ்ரீ விருதும், 2018-ம் ஆண்டில் பிரதமர் மோடி, இவருக்கு பத்ம விபூஷன் விருதும் வழங்கி கவுரவித்தனர்

கேரளாவில் கடந்த 1927-ம் ஆண்டு, ஆலப்புழா மாவட்டம், சேர்தலா நகரில் பிறந்தவர் பரமேஸ்வரன். திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் வரலாற்று இளங்கலைப் பட்டம் பெற்றார். சிறப்பான கல்வியறிவு கொண்டவராக விளங்கிய பரமேஸ்வரன் பல்கலைக்கழக்தில் முதல் மாணவராக வந்து தங்கப் பதக்கம் வென்றார்.

படிக்கும் காலத்திலேயே இந்து அமைப்புகளிலும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் ஆர்வமுள்ளவராக இருந்தார். சிறந்த எழுத்தாளராகவும், கவிஞராகவும், ஆய்வாளராகவும் இருந்த பரமேஸ்வரன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் மிகுந்த மரியாதைக்குரியவராக நடத்தப்பட்டார்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அவசரநிலை கொண்டுவரப்பட்டபோது, அதை எதிர்த்துப் போராடி 16 மாதங்கள் சிறையில் பரமேஸ்வரன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதிய ஜனசங்கத்தின் செயலாளராகக் கடந்த 1967 முதல் 1971-ம் ஆண்டு வரையிலும், 1971-77 வரை துணைத் தலைவராகவும், டெல்லியில் உள்ள தீனதயால் ஆய்வு மையத்தின் இயக்குநராக 1977-82 வரையிலும் பரமேஸ்வரன் பணியாற்றினார்

பாரதிய விசாரா கேந்திரத்தின் இயக்குநராகச் செயல்பட்ட பரமேஸ்வரன், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திராவுக்கும் தலைவராக இருந்தார்.

பரமேஸ்வரனின் உடல் இன்று பிற்பகலில் கொச்சி் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதன்பின் அங்கிருந்து இருந்து சொந்த ஊரான சேர்தலா அருகில் உள்ள முகம்மாவுக்கு இறுதிச் சடங்கிற்காகக் கொண்டுவரப்படுகிறது.

கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் பரமேஸ்வரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் பரமேஸ்வரன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் " பாரதமாதாவின் பெருமைக்குரிய, அர்ப்பணிப்பு மிக்க மகன் பி. பரமேஸ்வரன். இந்தியாவின் கலாச்சார, ஆன்மீக மறுமலர்ச்சிக்கும், ஏழைகளின் முன்னேற்றத்துக்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் பரமேஸ்வரன். பரமேஸ்வரின் தத்துவங்கள், சிந்தனைகள், எழுத்துகள் அற்புதமானவை.

தேசத்தைக் கட்டமைத்த தலைவர்களில் ஒருவர், பாரதிய விசாரா கேந்திரம், விவேகானந்தா கேந்திரம் உள்ளிட்ட பல அமைப்புகளை உருவாக்கி வளர்த்தவர். பல முறை அவருடன் உரையாடுவதற்கு எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன. ஆகச்சிறந்த அறிவாளி, அவரின் மறைவு வேதனையளிக்கிறது. ஓம் சாந்தி" எனத் தெரிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x