

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் சுதந்திரப் போராட்ட தியாகி எச்.எஸ். துரைசாமி 5 நாட்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெங்களூருவை சேர்ந்த 101 வயதான சுதந்திர போராட்ட வீரர் துரைசாமி பெங்களூரு டவுன் ஹால் எதிரே 5 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி கோரி போலீஸாரிடம் விண்ணப்பித்தார். இதற்கு அனுமதி அளிக்கமுடியாது என போலீஸார் கடந்த வியாழக்கிழமை தெரிவித்தனர்.
இதனை ஏற்க மறுத்த துரைசாமி அன்றைய தினமே டவுன்ஹால் எதிரே அமர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தர்ணாவில் அமர்ந்தார். 101 வயதான அவருக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் உள்ள நிலையில் வெயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அடுத்த 3 மணி நேரத்தில் துரைசாமி சோர்வடைந்ததை தொடர்ந்து, சமூக ஆர்வலர்கள் சிலர் பந்தல் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு அனுமதி மறுத்த போலீஸார் பந்தல் போட்ட 8 பேரை கைது செய்தனர்.
இதற்கு துரைசாமி, ‘‘குடியுரிமை திருத்த சட்டம் இந்திய அரசியலமைப்புக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது. இதை எதிர்த்து நாடு முழுவதும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெங்களூருவில் போராட்டம் நடத்த முடியவில்லை. பிரிட்டிஷாரை எதிர்த்துக் கூட எங்களால் போராட்டம் நடத்த முடிந்தது. ஆனால் எடியூரப்பாஆட்சியில் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்த அனுமதி கிடைக்கவில்லை.
எனது போராட்டத்துக்கு பந்தல் அமைத்த 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். போலீஸாரின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன். அனுமதி மறுத்த போலீஸாரின் கட்டுப்பாட்டை மீறி, போராட்டம் நடத்தும் என்னை கைது செய்யட்டும். டவுன்ஹால் எதிரில் போராட்டம் நடத்த அனுமதி வழங்க முடியாவிட்டால், வேறு இடத்தை ஒதுக்கி தரட்டும். எனது போராட்டத்தை போலீஸாரால் ஒருபோதும் நிறுத்த முடியாது'' என தெரிவித்தார்.
இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 2வது நாளாக துரைசாமி குடை பிடித்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவு தெரிவித்து சுதந்திரப் போராட்ட தியாகிகள், சமூக ஆர்வலர்கள், குடிமக்கள் உரிமை செயற்பாட்டு குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் நேற்று (3வது நாள்) துரைசாமியின் போராட்டத்துக்கு அனுமதி அளிப்பதாக தெரிவித்த போலீஸார், அவர் அமர்வதற்கு ஏதுவாக பந்தலும் அமைத்துக் கொடுத்தனர்.
கட்சி சாராதவன்
நேற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட துரைசாமி, ‘‘நான் இந்த நாட்டின் நலனுக்காகவே இந்த வயதிலும் போராட்டம் நடத்துகிறேன். நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் இல்லை. நான் யாருடைய ஆதரவாளனும் இல்லை. நாட்டு மக்களின் சுதந்திரமும், சமத்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு இடையூறாக இயற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி திரும்ப பெற வேண்டும்''என்றார். இரா.வினோத்