

கேரளா, தமிழகத்தைச் சேர்ந்த 17 மாணவ, மாணவியர் சீனாவில் இருந்து நேற்று முன்தினம் நாடு திரும்பினர்.
சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள டாலியன் பல்கலைக்கழகத்தில் கேரளா, தமிழகத்தைச் சேர்ந்த 17 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனாவில் சிக்கித் தவித்த 640 இந்தியர்களை மத்திய அரசு அண்மையில் விமானம் மூலம் மீட்டது.
அப்போது டாலியன் பல்கலைக்கழகத்தில் படித்த இந்திய மாணவ, மாணவியரும் அந்த விமானத்தின் மூலம் நாடு திரும்ப முயன்றனர். ஆனால் விசா நடைமுறை, குறித்த நேரத்துக்கு விமான நிலையத்துக்கு செல்ல முடியாததால் அவர்களால் நாடு திரும்ப முடியவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனாவின் குன்மிங் விமான நிலையத்தை அவர்கள் அணுகினர். ஆனால் அந்த விமான நிலைய அதிகாரிகள் எவ்வித உதவியும் செய்ய முன்வரவில்லை. அன்றிரவு விமான நிலையத்துக்கு வெளியே உள்ள கடையில் அவர்கள் தங்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளிதரன், மாணவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டார். அவரது முயற்சியால் 'தாய் ஏர்லைன்ஸ்' உதவ முன்வந்தது. இதன்படி 17 மாணவ, மாணவியரும் சீனாவின் குன்மிங் விமான நிலையத்தில் இருந்து தாய் ஏர்லைன்ஸ்' விமானம் மூலம் பாங்காக் சென்றனர்.
அங்கிருந்து 15 கேரள மாணவ, மாணவியர், ‘ஏர் ஆசியா' விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு கொச்சி விமான நிலையம் வந்தனர். இதர 2 பேர் பாங்காக்கில் இருந்து விமானம் மூலம் நேரடியாக தமிழகத்துக்கு சென்றனர்.
கொச்சிக்கு திரும்பிய 15 மாணவ, மாணவியர் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்றன. யாருக்கும் காய்ச்சல் இல்லாததால் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். எனினும் 28 நாட்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.