ரஷ்ய உளவு அமைப்பு கேஜிபி ரகசிய ஆவணங்களில் நேதாஜி பற்றி தகவல் கிடைத்தாலும் வெளியிட முடியாது: மத்திய அரசு திட்டவட்ட அறிவிப்பு

ரஷ்ய உளவு அமைப்பு கேஜிபி ரகசிய ஆவணங்களில் நேதாஜி பற்றி தகவல் கிடைத்தாலும் வெளியிட முடியாது: மத்திய அரசு திட்டவட்ட அறிவிப்பு
Updated on
2 min read

‘‘ரஷ்ய உளவு அமைப்பான கேஜிபியின் ஆவணங்களில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய தகவல்கள் கிடைத்தாலும் அவற்றை வெளியிட இயலாது’’ என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணம் குறித்து தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. கடந்த 1945-ம் ஆண்டு தைவான் விமான விபத்தில் நேதாஜி இறந்ததாக கூறப்படுகிறது.

நேதாஜி என்ன ஆனார் என்பது பற்றிய மர்மங்கள் 70 ஆண்டுகளாக தொடர்ந்து நீடிக்கும் நிலையில், ரஷ்யாவின் சிறையில் நேதாஜி இருந்ததாக அந்த நாட்டின் அப்போதைய உளவு அமைப்பான கேஜிபி தனது ஆவணங்களில் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 1996-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி, மத்திய அரசின் அப்போதைய கூடுதல் செயலர் (கிழக்கு ஐரோப்பா) ஆர்எல்.நாராயண் என்பவர், வெளியுறவுத் துறை செயலருக்கு ஒரு பரிந்துரை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

கடந்த 45-ம் ஆண்டு விமான விபத்தில் நேதாஜி இறந்ததாக கூறப்பட்டது. ஆனால், அதற்கு பிறகு சோவியத்/ரஷ்யாவில் இருந்து வெளிவந்த பல பத்திரிகைகளில் நேதாஜி ரஷ்யாவில் தங்கியிருந்ததாக பல கட்டுரைகள் வெளிவந்தன. ஆனால், 1992-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரஷ்ய வெளியுறவுத் துறையிடம் இருந்து எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது.அதில், ‘‘நேதாஜி ரஷ்யாவில் தங்கியதற்கான ஆதாரங்கள் எதுவும் மத்திய ஆவணக் காப்பகங்களில் உள்ள ஆவணங்களில் இல்லை’’ என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த சூழ்நிலையில், கேபிஜி.யின் ஆவண காப்பகம், அரசு ஆவண காப்பகம் மற்றும் தூதரக அதிகாரிகளின் ஆவணங் களில் நேதாஜி பற்றிய தகவல்கள் இருக் கிறதா என்று தேடிப் பார்க்க ரஷ்ய அதிகாரி களுக்கு இந்தியா கோரிக்கை வைக்கலாம். சோவியத் யூனியனில் நேதாஜி தங்கியதற் கான ஆதாரங்கள் அந்த ஆவணங்களில் கிடைத்தால், அவற்றை தெரிவிக்கும்படி இந்தியா கோரிக்கை வைக்கலாம்.

இவ்வாறு வெளியுறவுத் துறைக்கு அப்போதைய கூடுதல் செயலர் நாராயண் பரிந்துரை அனுப்பி உள்ளார்.

அதற்கு, அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, ஜனவரி 14-ம் தேதி ஒரு குறிப்பு அனுப்பி உள்ளார். அதில், ‘‘வெளியுறவு செயலரும் நாராயணும் இந்த விஷயம் குறித்து அவசரமாக ஆலோசிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘‘நேதாஜி பற்றிய தகவல்கள் கேஜிபி ஆவணங்களில் எதுவும் கிடைக்க வில்லை’’ என்று வெளியுறவுத் துறை முதலில் தெரிவித்தது. அதன்பிறகு, நாராயண் பரிந்துரை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று அதே கேள் வியை கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் அளிக்கப் பட்டது. அதற்கு, ‘‘தகவல் அறியும் உரிமை சட்டம் 2005, பிரிவு 8(1)(ஏ)-ன்படி அந்தத் தகவல்களை வெளியிட முடியாது’’ என்று வெளியுறவுத் துறை கைவிரித்துவிட்டது.

நேதாஜி பற்றிய தகவல்களை வெளியிடுவதால், இந்தியாவின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, அறிவியல் அல்லது பொருளாதார நலனுக்கு பாதிப்பு ஏற்படும். அத்துடன் பிற நாடுகளுடனான உறவும் பாதிக்கும். எனவே, ரகசிய தகவல்களை பாதுகாக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை செயலர்கள் மத்திய அரசுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

நேதாஜி பற்றிய ஆவணங்கள் குறித்து எல்லா தகவல்களையும் தெரியப்படுத்த வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது, வரும் 26-ம் தேதி ‘வெளிப்படையான குழு’ (டிரான்ஸ்பரன்ஸி பேனல்) விசாரணை நடத்த உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in