Last Updated : 08 Feb, 2020 03:55 PM

 

Published : 08 Feb 2020 03:55 PM
Last Updated : 08 Feb 2020 03:55 PM

இலங்கை தமிழர்களின் ஆசைகள் நிறைவேறும்: பிரதமர் ராஜபக்சவுடனான சந்திப்புக்குப்பின் பிரதமர் மோடி நம்பிக்கை

இலங்கையில் வாழும் தமிழர்களின் கனவுகளை, ஆசைகளை அந்நாட்டு அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்ச 4 நாட்கள் அதிகாரப்பூர்வ பயணமாக நேற்று புதுடெல்லி வந்தார். அவருக்கு விமானநிலையத்தில் மத்திய அரசு சார்பில் மத்திய மனிதவளத்துறை இணையமைச்சர் தோரட் வரவேற்றார். இலங்கை பிரதமராக பதவி ஏற்றபின் மகிந்தா ராஜபக்ச செல்லும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

இன்று காலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன், பிரதமர் மகிந்தா ராஜபக்ச சந்தித்துப் பேசினார். அப்போது இருதரப்பு நாடு உறவுகள், வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

அதன்பின் பிரதமர் நரேந்திர மோடியை, பிரமதர் மகிந்தா ராஜபக்ச சந்தித்துப் பேசினார். அப்போது இருநாட்டுத் தலைவர்களும் இருதரப்பு நாடுகளின் பாதுகாப்பு, நட்புறவு, வர்த்தகம், கடல்சார் பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு, இருதரப்பு மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசினர்.

அதன்பின் பிரதமர் மோடி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இலங்கையின் அரசின் நிலைத்தன்மை, பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய நலன்களின் மீது இந்தியா அக்கறை கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் நலன்களையும் இந்தியா கருத்தில் கொண்டுள்ளது.

இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்புறவு நாடாக இலங்கை இருந்து வருகிறது. இலங்கையின் அமைதிக்கும், மேம்பாட்டுக்கும் தொடர்ந்து இந்தியா துணை செய்யும்.

ஒன்றுபட்ட இலங்கையில் தமிழ் மக்களுக்கு உரிய மரியாதையை, நீதியை, சமத்துவத்தை, அமைதியை இலங்கை அரசு வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் என நம்புகிறேன்.

இருதரப்பு மீனவர்கள் விவகாரத்தைப் பொறுத்தவரை மனிதநேயத்துடன் இந்த விஷயத்தை நாம் அணுக வேண்டும்.

தீவிரவாதத்தை ஒழிக்கும் விஷயத்தில் இரு நாடுகளும் கூட்டாக இருந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். தீவிரவாதம் மிகப்பெரிய பிரச்சினையாக இரு நாடுகளுக்கும் இருக்கிறது. இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு தீவிரவாதத்துக்குப் பதிலடி கொடுப்போம். தீவிரவாதத்தைத் தடுக்கும் முயற்சியில் இருநாடுகளும் இன்னும் கூட்டுறவோடு செயல்படுவோம்." எனத் தெரிவித்தார்.

5 நாட்கள் பயணமாக வந்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச வாரணாசி, சார்நாத், புத்த கயா, திருப்பதி ஆகிய முக்கிய நகரங்களுக்குச் செல்ல உள்ளார்

தவறவிடாதீர்...

சிஏஏ எதிர்ப்பு: 2 கோடி கையெழுத்துகளை தாண்டி விட்டன; ஸ்டாலின்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x