பைக் ஓட்டிய சிறுவன்: உரிமையாளருக்கு ரூ.42,500 அபராதம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சாலையில் ஓட்டிச்செல்ல சிறுவனுக்கு தனது பைக்கை வழங்கிய அதன் உரிமையாளருக்கு புதிய மோட்டார் வாகனச் சட்டம் 2019ன்படி ரூ.42,500 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது.

பத்ரக் மாவட்டத்தில் நடந்த இச்சம்பவம் குறித்த போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:

மாவட்டத்தின் பண்டரிபோக்கரி வட்டாரத்திற்குட்பட்ட நுவாபோகரி பகுதியைச் சேர்ந்த பைக் உரிமையாளர் நாராயண் பெஹெரா என்பவர் தனது வண்டியை ஓட்டிச்செல்ல ஒரு சிறுவனிடம் தந்துள்ளார். சாலையில் விதிகள் ஏதும் பின்பற்றாமல் அச்சிறுவன் ஓட்டிச்சென்றது மிகவும் தவறான செயல் ஆகும். உரிமம் பெற உரிய வயது இல்லாமலேயே பைக் ஓட்டிச் சென்ற சிறுவன் நுவபோகாரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

சாலைப் போக்குவரத்து விதிகளுக்கு முரணான வகையில் செயல்பட்ட வண்டியின் உரிமையாளர் நாராயண் பெஹோராவுக்கு ரூ.42,500 அபராதம் விதிக்கப்பட்டது.

அந்தச் சலானிலேயே வெவ்வேறு பிரிவுகளில் இத்தொகை பிரித்து குறிப்பிடப்பட்டுள்ளது. பொது குற்றத்திற்காக ரூ.500, செல்லுபடியாகக்கூடிய சரியான ஓட்டுநர் உரிமம் இல்லாத நபரிடம் வாகனம் ஓட்ட அனுமதித்ததற்காக ரூ .5,000 அபராதம், செல்லுபடியாகக்கூடிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்கு ரூ.5,000, போக்குவரத்து ஓட்டத்திற்கு எதிராக வாகனம் ஓட்டியதற்கு ரூ .5,000,

மேலும், இரு சக்கர வாகனத்தில் இரண்டு நபர்களுக்கு மேல் சவாரி செய்வதற்கு ரூ.1,000, ஓட்டுநர் மற்றும் பில்லியன் தலைக்கவசம் இல்லாமல் சவாரி செய்வதற்கு ரூ.1,000 மற்றும் சிறார்களின் குற்றங்களின் கீழ் ரூ.25,000. ஆக மொத்தம் ரூ.42,500 நாராயண் பெஹோராவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் இதில் மாறுபட்ட கருத்து ஒன்றை ஒடிசாவின் மாநில போக்குவரத்து ஆணையம் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆணையம் ட்விட்டரில் கூறுகையில், சிறுவன் ஓட்டிய பைக் வாகனத்தின் உரிமையாளர் அல்லது பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் விதிக்க வேண்டும். மற்றபடி சிறுவனுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் கிடைக்காது.'' என்று தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in