Published : 08 Feb 2020 09:25 AM
Last Updated : 08 Feb 2020 09:25 AM

பலத்த பாதுகாப்புடன் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்

படம். | ஆர்.வி.மூர்த்தி.

70 இடங்களை கொண்டுள்ள டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, மற்றும் காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவினாலும், உண்மையான போட்டி ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையேதான் நிலவுகிறது. ஆட்சியை தக்க வைப்பதற்காக ஆம் ஆத்மியும், ஆட்சியை பிடிப்பதற்காக பாஜகவும் கடும் போட்டியில் இறங்கியுள்ளன.


இந்த தேர்தலில் ஆம் ஆத்மிக்காக முதல்வர் கேஜ்ரிவாலும், பாரதிய ஜனதாவுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். காங்கிரஸுக்காக அதன் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார்.

இந்த தேர்தலில் 1 கோடியே 46 லட்சத்து 92 ஆயிரத்து 136 வாக்காளர்களுக்காக 13 ஆயிரத்து 750 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 13 ஆயிரத்து 750 வாக்குச்சாவடிகளில் 2,689 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்றும், அதில் 545 வாக்குச்சாவடிகள் மிக மிக பதற்றமானவை என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனால் தேர்தலை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் டெல்லி போலீசார் 40 ஆயிரம் பேரும், மத்திய ஆயுதப்படை போலீசார் 20 ஆயிரம் பேரும், ஊர்க்காவல் படையினர் 19 ஆயிரம் பேரும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவாகிற ஓட்டுகள், 11-ந்தேதி எண்ணப்படுகின்றன. அன்று மதியமே டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது தெரிந்து விடும்.

வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா, டெல்லி வாக்காளார்களிடம் முறையிடுகையில் காங்கிரஸுக்கு வாக்களித்து டெல்லியில் மகிழ்ச்சியை மீண்டும் கொண்டு வாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

கேஜ்ரிவால் பெண் வாக்காளர்களை முன் வைத்து வீட்டில் எப்படி பொறுப்புடன் செயல் படுகிறீர்களோ அதே போல் டெல்லிக்காகவும் வாக்களிக்கும் போது பொறுப்புடன் செயல்படுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x