Last Updated : 07 Feb, 2020 08:06 PM

 

Published : 07 Feb 2020 08:06 PM
Last Updated : 07 Feb 2020 08:06 PM

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆபரணங்களை மதிப்பிட ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

கோப்புப்படம்

புதுடெல்லி

பந்தளம் ராஜகுடும்பத்தினரிடம் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயில் திருஆபரணங்களை மதிப்பிட உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சி.என். ராமசந்திரன் நாயரை நியமித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மூலவர் ஐயப்பனுக்கு மகரவிளக்கு பூஜையின் போது அவரின் திருஆபரணங்கள் பந்தளம் மகாராஜா குடும்பத்தில் இருந்து எடுத்துவரப்படும். மகரவிளக்கு பூஜை முடிந்தபின் ஆபரணங்கள் மீண்டும் மன்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.

இந்நிலையில் சமீபகாலமாக பந்தளம் மகாராஜா குடும்பத்துக்குள் பல்வேறு குழப்பங்கள் நீடிப்பதால், ஐயப்பன் நகைகளைப் பாதுகாப்பதில் கூடுதல் அக்கறை தேவை அதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஐயப்பன் கோயில் ஆபரணங்கள் யாருக்கும், எந்த குடும்பத்தினருக்கும் சொந்தமானது அல்ல. அந்த ஆபரணங்களைப் பாதுகாக்க கேரள அரசு வழிமுறைகளை வகுக்க வேண்டும். தேவைப்பட்டால் ஆபரணங்களைப் பாதுகாக்க ஒருவர் நியமிக்கப்படுவார் என்று புதன்கிழமை உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், சபரிமலை ஆபரணங்கள் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, அஜய் ரஸ்தோகி, வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்க அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கேரள அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் ஆஜராகினார். அப்போது வேணுகோபால் வாதிடுகையில், " இதேபோன்ற விவகாரம் திருவனந்தபுரம் பத்மனாபசாமி கோயில் விவகாரத்திலும் ஏற்பட்டது. அப்போது உச்ச நீதிமன்றம் ஒரு மதிப்பீட்டாளரை நியமித்து நகைகளை மதிப்பிட உத்தரவிட்டது. முதலில் பந்தளம் மகாராஜா குடும்பத்தின் வசம் இருக்கும் ஐயப்பனின் நகைகளைக் கேரள அரசு பட்டியலிட வேண்டும். இப்போதுள்ள நிலவரப்படி நகைகள் தோராயமாய பட்டியலிடப்பட்டுள்ளது. தங்கநகைகள் எத்தனை காரட் தங்கம், வைரத்தின் மதிப்பு போன்றவை தெரியாது. ஆதலால், நகை மதிப்பீட்டாளரை வைத்து நகைகளை மதிப்பிட வேண்டும்" எனத் தெரிவித்தார்

அதற்கு நீதிபதிகள் அமர்வு, " இப்போது பிரச்சினை பந்தளம் மகாராஜா குடும்பத்துக்குள் தானே. அவர்கள் நகைகள் பந்தளம் மகாராஜா குடும்பத்துக்குச் சொந்தமானது என்று கூறுகிறார்களே" என்றனர்.

அதற்கு வேணுகோபால் பதில் அளிக்கையில், " திருவனந்தபுரம் பத்மனாபசாமி கோயிலும் இதேபோன்ற சூழல்தான் நீடித்தது. அப்போது நகைகளுக்கு யார் உரிமை கோருவது என்ற குழப்பம் ஏற்பட்டது. ஆனால் யாரும் உரிமை கோர முடியாது என்ற நீதிமன்றம் கூறிவிட்டது" என்றார்.

அதன்பின், சபரிமலை ஐயப்பனுக்குச் சொந்தமான நகைகள் பட்டியலை நீதிபதியிடம் வேணுகோபால் அளித்தார். அதைப் பார்த்த நீதிபதிகள் அமர்வு, கோடிக்கணக்கில் நன்கொடை வருகிறது, ஐயப்பனுக்கு வெறும் 16 நகைகள் மட்டும்தான் சொந்தமாக இருக்கிறதா என்று வியப்புடன் கேட்டனர்.
அப்போது வேணுகோபால் குறுக்கிட்டு, " பந்தளம் அரச குடும்பத்தினர் தங்களிடம் இருக்கும் அனைத்து நகைகளையும் பட்டியலிட்டு, அதைமதிப்பிட நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என வலியுறுத்தினார்

பந்தளம் மன்னர் குடும்பத்தின் சார்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் கே. ராதாகிருஷ்ணன் வாதிடுகையில், " நகைகளை மறைமுகமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மாநில அரசு செய்யும் முயற்சியாகும். இப்போதுள்ள சூழலில் அரச குடும்பத்துக்குள் பிரச்சினை நிலவுகிறது. இது தீர்க்கப்படும். இதில் மாநில அரசு நுழைய அனுமதிக்கப்படாது. இது அரச குடும்பத்தின் சொத்தாகும்" எனத் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் அமர்வு கூறுகையில், " எதற்காக ஐயப்பன் கோயில் நகைகளை மதிப்பிடவும், கணக்கெடுக்கவும் நீங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறீர்கள். பந்தளம் மகாராஜா இல்லத்தில் இருந்து நகைகளை வெளியே கொண்டுவராமல் அங்கு இருந்தவாரே ஒரு மதிப்பீட்டாளர் நகையை மதிப்பிடலாமே. ஐயப்பனுக்குச் சூட்டுவதைத் தவிரவேறு எந்த பணிக்கும் இந்த நகை பயன்படுத்த முடியாது தானே. எங்களுடைய கவலை எல்லாம் அந்த புனிதமான நகைகளின் பாதுகாப்பு பற்றித்தான்.

ஆதலால், நகைகளை மதிப்பிடுவதற்கு உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சி.என்.ராமச்சந்திரன் நாயரை நியமிக்கிறோம். அவர் நகைகளை மதிப்பிட்டு, கணக்கிடு அதன் மதிப்பீடுகள், எண்ணிக்கையை சீல் வைக்கப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார். தேவைப்பட்டால் அவர்களுக்கு அட்டனர்னி ஜெனரல் வேணுகோபால் உதவுவார். " என்று உத்தரவிட்டனர்.

தவறவிடாதீர்...

டெல்லி தேர்தல் பிரச்சாரம்: கேஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

'சட்டம் வாழ வாய்ப்பளித்தபோது தூக்கிலிடுவது பாவம்': நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிட புதிய தேதி கோரிய திகார் சிறை மனு தள்ளுபடி

நாளை2-வது போட்டி: ஒருநாள் தொடரைத் தக்கவைக்குமா இந்திய அணி? வீரர்கள் மாற்றத்துக்கு வாய்ப்பு: 6.8 அடி உயர நியூஸி. பந்துவீச்சாளர் அறிமுகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x