

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக்கப்பட்ட பின், ஜம்முவில் திருமலா திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜம்முவில் கோயில் கட்டுவதற்கான இடத்தைத் தேர்வு செய்ய குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. அதன்பின் கடந்த அக்டோபர் 31-ம் தேதி முதல் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்துக்கள் அதிகமாக இருக்கும் ஜம்மு பிராந்தியத்தில் திருமலா திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், கூடுதல் செயல் அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் இன்று ஜம்மு நகருக்குக் கோயில் அமைக்கும் இடத்தைத் தேர்வு செய்யச் சென்றுள்ளனர். அங்கு பல்வேறு இடங்களைப் பார்வையிடும் தேவஸ்தான அதிகாரிகள் இடத்தை இறுதி செய்ய உள்ளனர்.
இதற்கிடையே தேவஸ்தானத்தின் சார்பில் பொறியாளர்கள், ஸ்தபதிகள் ஆகியோர் ஏற்கெனவே ஜம்மு நகருக்குச் சென்று அங்கு 7 இடங்களைப் பார்வையிட்டு, அதில் 4 இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்றுள்ள அதிகாரிகள் குழு நாளை ஜம்மு நகருக்குச் சென்று 4 முக்கிய இடங்களையும் பார்வையிட்டு அதில் ஒரு இடத்தைத் தேர்வு செய்ய உள்ளனர்.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சிங்கால் கூறுகையில், "ஜம்முவில் திருப்பதி கோயில் கட்டுவதற்கான இடத்தைத் தேர்வு செய்துவிட்டால், நிர்வாக அதிகாரிகள் அதற்குரிய அடுத்தகட்டப் பணிகளைச் செய்வார்கள். இடமும் உடனடியாக தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டுக் கட்டிட வடிவமைப்பு, கட்டுமானத் திட்டம் ஆகியவை முடிவு செய்யப்படும்.
இதற்கிடையே சமீபத்தில் திருமலா தேவஸ்தான வாரியம் உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி சென்று அங்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில் கட்டுவது குறித்து ஆலோசித்துள்ளனர். அனைத்தும் எதிர்பார்த்தபடி நல்லபடியாகச் சென்றால், கட்டுமானம் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும்" எனத் தெரிவித்தார்.