Published : 07 Feb 2020 03:26 PM
Last Updated : 07 Feb 2020 03:26 PM

டெல்லி தேர்தலில் 10 மணிக்குள் வாக்களித்து விடுங்கள்: பாஜக தொண்டர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் காலை 10 மணிக்குள் கட்டாயம் வாக்களித்து விட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை 8-ம் தேதி தேர்தலும், 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்க உள்ளது. 2-வது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தீவிரமாகப் பிரச்சாரம் செய்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்குச் செய்த நலத்திட்டப்பணிகள், திட்டங்கள் போன்றவற்றைக் கூறி பிரச்சாரம் செய்தார்.

அதேசமயம், 1998-ம் ஆண்டுக்குப் பின் பாஜகவால் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. ஏறக்குறைய 22 ஆண்டுகளாகப் பிறகு இந்த முறை ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முயற்சி மேற்கொண்டுள்ளது.

அதேபோல காங்கிரஸ் கட்சியும், 2014-ம் ஆண்டுக்குப் பின் டெல்லியைக் கைப்பற்ற முடியாமல் திணறி வருகிறது.

இதனால் இந்த முறை காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி இருந்தாலும், பாஜக, ஆம் ஆத்மி இடையேதான் தீவிரமான போட்டி இருந்து வருகிறது.

ஆனால், தேர்தலுக்கு முந்தைய பல கணிப்புகள் வெளிவந்துள்ள நிலையில், பெரும்பாலானவை மீண்டும் ஆம் ஆத்மி கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன.

டெல்லியில் நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

டெல்லி நாட்டின் தலைநகர் என்பதால் பல மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் வசிக்கின்றனர்.

டெல்லியில் வாக்குரிமை உள்ள பாஜகவினர் அனைவரும் காலை 10 மணிக்குள் வாக்களிப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அவர்கள் வாக்குகள் கணிசமாக இருப்பதால் அது கட்சியின் வெற்றிக்கு மிக முக்கியமாகும்.

அதுபோலவே டெல்லியில் உள்ள 13,750 வாக்குச்சாவடிகளிலும் காலை 6 மணிக்கு பாஜக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் வருகை தர வேண்டும். நமது வாக்காளர்களின் வாக்குகள் தவறாமல் பதிவாவதை பொறுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

வாக்குப்பதிவு முடியும் வரை கண்ணும் கருத்துமாக இருந்து பாஜகவுக்கு அதிகமான வாக்குகளை பெற்று தர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x