

சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்தியாயினிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு சிறை தண்டனை விதித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவுக்கு எதிராக வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்தியாயினி மாநகராட்சியில் கண்டனம் தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றினார்.
இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த வழக்கறிஞர் தர்மபால், சமூக ஆர்வலர் ஜெயகுமார் ஹிரேமத் ஆகியோர் வேலூர் மேயருக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் மோகன சந்தன கவுடா, பூதியாள் ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் தர்மபால் ஆஜராகி, “ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை விமர்சித்து தமிழகத்தில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட வேலூர் மாநகராட்சியின் மேயர் கார்த்தியாயினி, நீதிபதிக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றினார். இதன் மூலம் நீதித்துறைக்கும், நீதிபதியின் நீதி பரிபாலனத்துக்கும், அவரது புகழுக்கும் களங்கம் விளைவித்துள்ளார். நீதித்துறையை அவமதித்த கார்த்தியாயினி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வாதிட்டார்.
இதையடுத்து மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “வேலூர் மேயர் கார்த்தியாயினி இன்னும் 2 வாரங்களுக்குள் இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும்” என்று கூறி வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.