Last Updated : 07 Feb, 2020 10:00 AM

 

Published : 07 Feb 2020 10:00 AM
Last Updated : 07 Feb 2020 10:00 AM

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு விரைவில் இயக்குநர் நியமிக்கப்படுவார்: மக்களவையில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்

புதுடெல்லி

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு விரைவில் இயக்குநர் நியமிக்கப்படுவார் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியால் சென்னையில் 2006-ல் துவங்கப்பட்டது செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம். இதற்கு நிரந்தரமான பதவியில் இயக்குநர் 14 ஆண்டுகளாக அமர்த்தப்படாமல் இருந்தது. இதனால், செயல்படாத நிலைக்கு தள்ளப்பட்டு வந்த செம்மொழி நிறுவன இயக்குநர் பதவி குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன. இப்பிரச்சினை நாடாளுமன்றத்தின் கடந்த இரண்டு கூட்டத்தொடர்களிலும் எழுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 30-ல் இயக்குநருக்கான நேர்முகத்தேர்வு டெல்லியில் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்டவரது பெயர் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் விழுப்புரம் தொகுதி எம்.பியுமான டி.ரவிகுமார் மக்களவையில் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அதில் அவர், செம்மொழி நிறுவனத்துக்கு நிரந்தர இயக்குநர் உள்ளாரா? என்றும் அது தொடர்பான விவரங்களையும் அளிக்குமாறும் கேட்டிருந்தார்.

இதற்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறும்போது, ‘நிரந்தர இயக்குநர் நியமிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தேர்வுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு அதனுடைய பரிந்துரை, பணி நியமனத்துக்கான அமைச்சரவை குழுவுக்கு (Appointment Committee of the Cabinet) அனுப்பப்பட்டு உள்ளது. பணி நியமனத்துக்கான அமைச்சரவை குழுவின் ஒப்புதல் அளிக்கப்பட்டதும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு நிரந்தர இயக்குநர் நியமிக்கப்படுவார்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கடந்த 2014-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் இறுதியில் முதன்முறையாக ஒரு இயக்குநரை அமர்த்த நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது.

இதில், ஆந்திர மாநிலம் குப்பத்தில் திராவிடப் பல்கலைகழகத்தின் மொழியியல் துறை பேராசிரியரான ஜி.பாலசுப்பிரமணியன் தேர்வு செய்யப்பட்டார். இந்த தெரிவுக்குழுவில் எழுத்தாளர்கள் பொன்னீலன் மற்றும் தோப்பில் முகம்மது மீரான் இடம் பெற்றிருந்தனர். தேர்வுக்கு பின் பாலசுப்பிரமணியத்துக்கு காவல்துறையினரின் சரிபார்த்தல் நடத்தி முடிக்கப்பட்ட போது மத்தியில் பாஜக தலைமையிலான புதிய ஆட்சி அமைந்தது.

அப்போது, தமிழக பாஜக தலைவரின் தலையீடு காரணமாக உத்தரவு ரத்து செய்யப்பட்ட தாகப் புகார் எழுந்தது. பிறகு அப்பதவிக்கு மூன்று முறை விளம்பரம் அளிக்கப்பட்டும் இயக்குநர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தற்போது, நான்காம் முறைக்கான நேர்முகத்தேர்வின் முடிவு வெளியிடப்படாமல் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x