Published : 07 Feb 2020 09:57 AM
Last Updated : 07 Feb 2020 09:57 AM

சபரிமலை ஐயப்பனின் ஆபரண பாதுகாப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவோம்: கேரள அமைச்சர் உறுதி

சபரிமலை ஐயப்பனின் ஆபரணங்களை பாதுகாக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவோம் என கேரள அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சொந்தமான ஆபரணங்கள் பந்தளம் அரச குடும்பத்தினரின் பாதுகாப்பில் இருந்து வருகிறது. மகர விளக்கு பூஜையின்போது மட்டும் அந்த ஆபரணங்கள் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும். பின்னர் மீண்டும் பந்தளம் அரண்மனையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரச குடும்பத்தினருக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகிப்பது மற்றும் ஆபரணங்களை பாதுகாப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறும்போது, “ஐயப்பனின் ஆபரணங்கள் எந்த குடும்பத்தினருக்கும் சொந்தமானது அல்ல. அரச குடும்பத்தில் பிரச்சினை தீரும் வரையில் அந்த ஆபரணங்களை பாதுகாக்க ஒரு தனிநபரை நியமிப்பது குறித்து கேரள அரசு பரிசீலிக்க வேண்டும். இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை 7-ம் தேதி (இன்று) கேரள அரசு தெரிவிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், கேரள தேவசம் வாரிய அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கொச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஐயப்பனின் ஆபரணங்கள் பந்தளம் அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவற்றுக்கு அரசு சார்பில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. எனவே, அந்த ஆபரணங்களை அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை. எனினும், அந்த ஆபரணங்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் அதை அமல்படுத்த தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பந்தளம் அரண்மனையின் பிரதிநிதி ஒருவர் இதுகுறித்து கூறும்போது, “ஐயப்பனின் ஆபரணங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அரண்மனையில் நவீன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் ஆபரணங்களின் பாதுகாப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை” என்றார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x