

தூர்தர்ஷன் தொலைக்காட்சி சுதந்திரம் இன்றி தவிப்பதாக பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
"நாம் பத்திரிக்கை சுதந்திரம் நசுக்கப்பட்ட அவசர காலத்தை கண்கூடாக பார்த்துள்ளோம். அது நமது ஜனநாயகத்தின் மீதான கரும்புள்ளி. அதே நிலையே தற்போது மீண்டும் பார்க்கப்படுகிறது. நமது தேசிய தொலைக்காட்சியை பார்க்கவே எனக்கு பரிதாபமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. அந்த தொலைக்காட்சி தனது தொழில் சுதந்திரத்தைக் காக்க பெரும் பாடுபடுகிறது” என்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நரேந்திர மோடியின் நேர்காணல் நிகழ்ச்சியின் சில பகுதிகள் நீக்கப்பட்டதை, பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் சர்க்கார் ஒப்புக்கொள்வதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அதில் அவர், தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் மனீஷ் திவாரியின் அழுத்தத்தின் காரணமாகவே மோடியின் நேர்காணலின் சில பகுதிகள் நீக்கப்பட்டதாக கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்தே மோடி, தேசிய தொலைக்காட்சியான தூர்தர்ஷன் குறித்த இந்த கருத்தை பதிவு செய்துள்ளார். தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்திய ரேடியோ, பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடதக்கது.