Last Updated : 06 Feb, 2020 09:14 PM

 

Published : 06 Feb 2020 09:14 PM
Last Updated : 06 Feb 2020 09:14 PM

பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள் மூடப்படாது; புத்துயிரூட்ட முயற்சி எடுக்கப்படும்: மத்திய அரசு உறுதி

புதுடெல்லி

தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியவற்றை மூடமாட்டோம். அவற்றை மறுசீரமைப்பு செய்யவும், புத்துயிரூட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநிலங்களவையில் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்எஎன்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள் இழப்பில் செயல்படுகின்றன. தனியார் நிறுவனங்களுக்கு ஈடாகச் செயல்படமுடியவில்லை என மத்திய அரசு கருதியது. இதனால் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மத்திய அரசு விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தில் ஏறக்குறைய 75 ஆயிரம் பணியாளர்கள் வேலையை ராஜினாமா செய்தனர். மேலும், தொழிலாளர்கள் மத்தியிலும் இரு நிறுவனங்களை மூடுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதோ என்ற அச்சம் நிலவியது.

இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் விளக்கம் அளித்தார்.

கேள்வி நேரத்தின்போது அவர் கூறியதாவது:

''தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள் ஒருபோதும் மூடப்படாது. புத்துயிரூட்டும் முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்படும். அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக அந்த நிறுவனங்களின் நிலம், மற்ற சொத்துகள் உச்சபட்ச அளவில் பயன்படுத்தப்படும். இந்த நிறுவனங்களில் இருக்கும் பிரச்சினைகள் விரைவில் களையப்படும்.

இந்த இரு நிறுவனங்களும் மூடப்படாது என்று அவையில் நான் உறுதியளிக்கிறேன். இரு நிறுவனங்களின் புத்தாக்கத்துக்கும் அரசு நிதி ஒதுக்கீடு செய்யும்.

பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கின் தொலைத்தொடர்பு கோபுரங்களை மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கப்படும். அதன் மூலம் வருவாய் உருவாக்கப்படும்.

பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனத்துக்குச் சொந்தமான டவர்களை ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டல் ஆகியவை பகிர்ந்துகொள்ள அனுமதிக்கப்பட்டு வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருக்கும் 13,146 மொபைல் டவர்களில் ரிலையன்ஸ் 8,363 டவர்களையும், பார்தி ஏர்டெல் 2,799 டவர்களையும், வோடபோன் ஐடியா நிறுவனம் 1,792 டவர்களையும் பயன்படுத்துகின்றன.

எம்டிஎன்எல் நிறுவனத்தின் 402 மொபைல் டவர்களில் 137 டவர்களை ஜியோ நிறுவனமும், 100 டவர்களை பார்தி ஏர்டெல் நிறுவனமும், வோடபோன் ஐடியா நிறுவனம் 165 டவர்களையும் பயன்படுத்தி வருகின்றன.

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.167.97 கோடியும், எம்டிஎன்எல் நிறுவனத்துக்கு ரூ.11.62 கோடியும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நிலுவைக் கட்டணம் வைத்துள்ளது''.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x