Last Updated : 06 Feb, 2020 08:02 PM

 

Published : 06 Feb 2020 08:02 PM
Last Updated : 06 Feb 2020 08:02 PM

போக்குவரத்துத் துறை வருமானம் குறைந்தது ஏன்?- நிதின் கட்கரி பதிலால் வெளியான உண்மை 

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை எஃப்சி எடுத்தால் போதும் என மாற்றியதால் போக்குவரத்துத் துறையின் வருமானம் குறைந்தது. இது, விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் கேட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்ததின் மூலம் தெரியவந்துள்ளது.

ஆண்டுக்கு ஒருமுறை எஃப்சி எடுக்கவேண்டும் என்பதை மாற்றி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை எஃப்சி எடுத்தால் போதும் என மாற்றியதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதும், மக்களுக்கு ‘ரிஸ்க்’ அதிகரித்திருப்பதும் உண்மையா? அவ்வாறெனில் அந்த நடவடிக்கையின் நோக்கம் என்ன? 2014-2019 காலகட்டத்தில் எஃப்சி வழங்கியதன் மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் விவரங்களை வழங்குக என்று விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு இன்று (06.02.2020) அமைச்சர் நிதின் கட்கரி அளித்துள்ள எழுத்துபூர்வமான பதில்:

“மோட்டார் வாகன விதிகள் 1989-ல் விதி 62 ஐத் திருத்தம் செய்து எமது அமைச்சகம் வெளியிட்ட குறிப்பாணை GST 1081 (E) dated 02.11.2018 இன் படி 8 ஆண்டுகள் வரையிலான வாகனங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் அதற்கு மேற்பட்ட பழைய வாகனங்கள் ஒவ்வொரு ஆண்டும் எஃப்சி எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

எஃப்சி வழங்கியதன் மூலம் 2014-ல் ரூ.70.11 கோடியும், 2015-ல் ரூ.74.15 கோடியும், 2016-ல் ரூ.74.13 கோடியும், 2017-ல் ரூ.173.45 கோடியும், 2018-ல் ரூ.146.2 கோடியும் வருவாயாகக் கிடைத்தன. 2019-ல் ரூ.116. 4 கோடி வருவாய் கிடைத்தது''.

இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு விதிகள் திருத்தம் செய்யப்பட்டபின் வருவாயில் 30 கோடி ரூபாய் குறைந்துள்ளது அமைச்சரின் பதிலால் தெரியவந்துள்ளது. இந்த மாற்றத்தால் மக்களுக்கு அதிகரித்துள்ள ‘ரிஸ்க்’ குறித்து அமைச்சர் எதுவும் தெரிவிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x