Published : 06 Feb 2020 05:00 PM
Last Updated : 06 Feb 2020 05:00 PM

சபரிமலை வழக்கில் சட்டம் சார்ந்த கேள்விகள் பெரிய அமர்வுக்கு மாற்றப்படுமா? - உத்தரவு ஒத்திவைப்பு

சபரிமலை வழக்கில் மறுஆய்வு மனுக்களில் சட்டம் சார்ந்த கேள்விகள் பெரிய அமர்வுக்கு மாற்றப்படலாமா என்பது குறித்த உத்தரவை பிப்ரவரி 10-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இந்த நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று கடந்த 2018 செப்டம்பரில் தீர்ப்பளித்தது.

தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த நவம்பர் 14-ம் தேதி இவற்றை விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வு, பெரிய அமர்வுக்கு வழக்கை மாற்றியது. இதன்படி தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது.

சபரிமலை மட்டுமன்றி, மசூதிகளில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது, பார்சி பெண்கள் வேறு சமுதாய ஆண்களை திருமணம் செய்யும்போது அவர்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவது குறித்தும் விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்துள்ளார்.

என்னென்ன விவகாரங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்பது குறித்து அனைத்து தரப்பு வழக்கறிஞர்களும் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் வழக்கறிஞர்களிடம் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதைத் தொடர்ந்து, எந்தெந்த விவகாரங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றமே வரையறுத்துக் கொள்ளும் என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்தார்.

இந்தநிலையில் சபரிமலை வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மறுஆய்வு மனுக்களில் ‘சட்டம் சார்ந்த கேள்விகள்' பெரிய அமர்வுக்கு மாற்றப்படலாமா என்பது குறித்து விவாதம் இன்று நடைபெற்றது.

இந்த வழக்கில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில் ‘‘மறுஆய்வு மனுக்களை பொறுத்தவரை ‘சட்டம் சார்ந்த கேள்விகள்' குறித்த ஆய்வு அவசியம். எனவே இதனை பெரிய அமர்வு விசாரிக்கப்பட வேண்டிய அவசியம்’’ என்றார். இந்த வழக்கில் ஆஜரான பாலி எப் நாரிமன் வாதிடுகையில் ‘‘இதுபோன்ற விஷயங்களில் குடியரசுத் தலைவர் மட்டுமே இதுபோன்ற விவகாரங்களில் கேள்வி கேட்க முடியும். இதற்கு நீதிமன்றங்களுக்கு அதிகாரமில்லை’’ என்றார்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் உத்தரவை பிப்ரவரி 10-ம் தேதி பிறப்பிப்பதாக தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் தினந்தோறும் விசாரணை பிப்ரவரி 12-ம் தேதி தொடங்கும் என அவர் அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x