

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மட்டும் கடந்த 1990களில் ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்தில் ரத யாத்திரை நடத்தாமல் இருந்திருந்தால், பாஜகவுக்கு அரசியலில் இன்றுள்ள வளர்ச்சி இருந்திருக்காது என்று சிவசேனா விமர்சித்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி நேற்று மக்களவையில் வெளியிட்டார். ஸ்ரீ ராமஜென்மபூமி திரத் ஷேத்ரா எனும் அறக்கட்டளை உருவாக்கப்படும் என்று மோடி தெரிவித்தார்.
ஆனால், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டது குறித்து சிவசேனா தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் விமர்சித்துக் கட்டுரை எழுதியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
"டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 4 நாட்கள் இருக்கும் முன்பாக பிரதமர் மோடி 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தை எழுப்பியுள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் தொகுதிகள் இரு மடங்காக இந்த கோஷத்தால் உயர்ந்தால் எங்களுக்கு மகிழ்ச்சிதான்.
ராமர் கோயில் விவகாரத்தை பாஜக அரசியலாக்காது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அடித்தளமாக இந்த கோஷத்தை வைத்து 2024-ம் ஆண்டு இதை முடிப்பார்கள்.
ராம ராஜ்ஜியம் இந்த நாட்டில் உண்மையான நோக்கில் வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் சவாலாகவும், மன நிம்மதியற்ற சூழலையும் அரவிந்த் கேஜ்ரிவால் உருவாக்கி இருக்கிறார் என்பதால், வேறு வழியின்றி 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தை பாஜக கொண்டு வந்துள்ளதாகவே கருதுகிறோம்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 4 நாட்களுக்கு முன்பாக பிரதமர் மோடி ராமர் கோயில் அறக்கட்டளை அறிவிப்பை வெளியிடுகிறார். அதைவிட முக்கியம் இந்த அறிவிப்பை பிரதமர் மோடி மக்களவையில் வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ராமர் கோயில் அறக்கட்டளை குறித்து அறிவிப்பு வெளியிட்ட பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று சிவசேனா நீண்டகாலமாக முழக்கம் செய்து வருகிறது. ஆனால், பாஜக அரசு அமைக்க இருக்கும் அறக்கட்டளை எந்த அளவுக்கு சுயேச்சையாகச் செயல்படும் என்பது அதில் நியமிக்கப்படும் உறுப்பினர்களைப் பொறுத்துதான் அமையும். இந்த அறக்கட்டளையில் ராமர் கோயில் கட்டுமானத்துக்காகப் பிரச்சாரம் செய்த அனைத்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக இடம் பெற வேண்டும். அப்போதுதான் இது சுயேச்சையான அமைப்பாக இருக்கும்.
பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தின்போது சிவசேனா தொண்டர்கள் கையில் சுத்தியலுடன் அயோத்தி சென்றார்கள். அவர்களைப் பார்த்து மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே பெருமைப்பட்டார். நூற்றுக்கணக்கான சிவசேனா தொண்டர்கள் பாபர் மசூதி இடிப்புக் கலவரத்தில் தங்கள் உயிரைத் தியாகம் செய்தார்கள்.
ஆதலால், இப்போது ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை முன்னெடுப்பவர்கள் இதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கடந்த 1990-களில் ராமரின் பெயரில் ரத யாத்திரையை நாடு முழுவதும் நடத்தி இருக்காவிட்டால், இன்றைய அரசியலில் பாஜகவுக்கு இவ்வளவு பெரிய இடம் கிடைத்திருக்காது.
பாஜகவின் தேர்தல் வாக்குறுதியில் நீண்டகாலமாக ராமர் கோயில் இருந்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டில் மோடி அரசு வந்ததில் இருந்து இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் என்று எதிர்பார்த்திருந்தோம்.
கடந்த முறை சிவசேனா மத்தியில் கூட்டணியில் இருந்தபோது ராமர் கோயில் கட்டுவதற்காக அவசரச் சட்டம் கொண்டுவரக் கோரினோம். ஆனால், அப்போது அதைச் செய்ய மோடி அரசு மறுத்துவிட்டது.
ஆனால், இப்போது 40 நாட்கள் விசாரணைக்குப் பின் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் எதிரொலியால் ராமர் கோயில் கட்ட அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை எந்த அரசும் ஏற்று தலைவணங்கிச் செய்ய வேண்டும். பிரதமர் மோடியும் அந்த வகையில் அந்த உத்தரவைப் பின்பற்றியுள்ளார்''.
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.