

"பொது வாழ்வில் அவரைப் போன்று யாரும் இல்லை என்றே நம்புகிறேன். பொது மக்கள் எளிதில் அணுகக் கூடியவராகவே எப்போதும் இருந்தார்".
புகழ்பெற்ற பொதுத்துறை நிறுவனமொன்றில் இப்போது பொறியாளராக வேலைபார்க்கும் 29 வயது அகில் குப்தா, ஒரு பெண் குழந்தையின் அப்பா. பதினோரு வருடங்களுக்கு முன்னால் இதே குப்தா, டீனேஜ் பையனாக, பிரகாசித்துக் கொண்டிருந்த தனது கல்வி வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த நிலையோடு இருந்தார். தன் வாழ்வின் விடிவெள்ளியாகக் கருதும் கலாமின் உதவியால் அதை மீட்டெடுத்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூரைச் சேர்ந்த குப்தா, அருகில் இருந்த சிபிஎஸ்சி பள்ளியின் சிறந்த மாணவனாய் இருந்தான். அப்போது தனது வாழ்க்கையையே தீர்மானிக்கப் போகும் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவைப் பற்றி, அவன் அறிந்திருக்கவில்லை. உற்சாகத்துடனும், கடின உழைப்புடனும் தனது படிப்பில் தீவிர கவனம் செலுத்தினான் குப்தா. தேர்வுகள் தொடங்கின. நல்ல முறையில் தேர்வுகளை எழுதி முடித்தான். தேர்வு முடிவுகள் வெளிவந்தன. கணிதம், வேதியியல் மற்றும் கணிப்பொறியியல் ஆகியவற்றில் 97 சதவீத மதிப்பெண். அதே நேரம் இயற்பியல் பாட செய்முறைத் தேர்வில் 70 மதிப்பெண்களுக்கு மொத்தம் 13 மதிப்பெண்களுடன் தோல்வி.
குப்தாவின் பொறியியல் கனவு பொசுங்கிப்போனது. குப்தாவின் பெற்றோர்கள் அலகாபாத் சிபிஎஸ்சியின் உயர் வட்டார அலுவலர்களைச் சந்தித்தனர். டெல்லியில் இருக்கும் தேர்வாணைய இயக்குநருக்குக் கடிதம் எழுதி தங்களின் நிலையை விளக்கினர். அடுத்த மாதத்தில் மறுகூட்டல் முடிவு வந்தது. 'தங்களிடம் எந்தத் தவறும் இல்லை; இயற்பியல் செய்முறை தேர்வில் 70 மதிப்பெண்ணுக்கு 13 தான்' என, சிபிஎஸ்சி கையை விரித்தது.
அரசாங்க ஊழியரான குப்தாவின் தந்தை யோசனையற்று நின்றார். எல்லா முயற்சிகளும் பயனற்றுப் போக, கடைசியில் நீதிமன்றத்தை நாட முடிவு செய்தனர் பெற்றோர். கலாமைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த டீனேஜ் சிறுவன் குப்தா, தனக்கு நேர்ந்த நிலையை விளக்கி கலாமுக்கு ஒரு கடிதம் எழுதினான்.
எல்லாப் பக்கங்களில் இருந்தும் நம்பிக்கையை இழந்திருந்த குப்தாவின் குடும்பத்துக்கு, குடியரசுத்தலைவரின் மாளிகையில் இருந்து உடனே பதில் கடிதம் வந்தது. அதில் குப்தாவின் பிரச்சனையைப் பார்க்கக் கோரி, மத்திய மனிதவள அமைச்சகத்தின் செயலாளருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
இரண்டு வாரங்களுக்குள்ளாகவே, அவர்களுக்கு சிபிஎஸ்சியிடம் இருந்து பதிவு செய்யப்பட்ட கடிதம் வந்தது. விடைத்தாள் திருத்தலில் தவறு நேர்ந்திருப்பதாகவும், குப்தா 70-க்கு, 13 மதிப்பெண்களுக்குப் பதிலாக 55 மதிப்பெண்களைப் பெற்றிருப்பதாகவும் கூறியது. திருத்தப்பட்ட மறு கூட்டல் மதிப்பெண்ணோடு, குப்தா 85 சதவீத மதிப்பெண்களைப் பெற்றார். பள்ளியில் மட்டுமல்லாது, ராம்பூர் மாவட்டத்திலேயே முதலிடமும் கிடைத்தது.
கலாம், இளைய தலைமுறைக்கு, முன்மாதிரியாக இருக்க, குப்தாவுக்கு அச்சிறுவனின் வாழ்க்கையையே மீட்டெடுத்துக் கொடுத்தவராய் ஆனார்.
பிட்ஸ் (பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்) பிலானியில் இயந்திரவியல் பொறியியல் முடித்த குப்தா, இப்போது பெல் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
இது பற்றிப் பேசிய குப்தா, "கலாம், என் வாழ்க்கையில் வரங்களை அள்ளித் தருபவராகவே வந்தார். என்னுடைய வாழ்க்கை எப்போதும் அவருக்கு கடன்பட்டிருக்கிறது. பொது வாழ்வில் அவரைப் போன்று யாரும் இல்லை என்றே நம்புகிறேன். பொது மக்கள் எளிதில் அணுகக் கூடியவராகவே எப்போதும் இருந்தார்.
கலாமை நேரில் சந்தித்து என் நன்றியைத் தெரிவிக்கவில்லை. ஆனால் குடியரசுத்தலைவர் மாளிகையின் மூத்த அலுவலர்கள், 'கலாம் எனது கடிதத்தை நேரடியாகப் படித்து, தனது அலுவலகத்துக்கு அனுப்பி தேவையான நடவடிக்கைகளை எடுக்கச்சொன்னார்' என்று கூறினர்.
அவருடைய மறைவு எனக்கு மிகப்பெரிய ஒரு பின்னடைவு. எல்லா இந்தியர்களின் வாழ்க்கையிலும், கலாம் ஒரு வெற்றிடத்தை நிரப்பிவிட்டுச் சென்றுவிட்டார். ஒரு மனிதன் தன்னுடைய அர்ப்பணிப்பால் மட்டுமே, மிக உயர்ந்த சாதனைகளைச் செய்ய முடியும் என்பதற்கு அவரின் வாழ்க்கையே சிறந்த எடுத்துக்காட்டு" என்று கூறினார்.
தமிழில்: க.சே.ரமணி பிரபா தேவி