

சபரிமலை ஐயப்பன் கோயில் உட்பட மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களை அனுமதிக்க மறுப்பதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இந்த நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று கடந்த 2018 செப்டம்பரில் தீர்ப்பளித்தது.
தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த நவம்பர் 14-ம் தேதி இவற்றை விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வு, பெரிய அமர்வுக்கு வழக்கை மாற்றியது. இதன்படி தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது.
சபரிமலை மட்டுமன்றி, மசூதிகளில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது, பார்சி பெண்கள் வேறு சமுதாய ஆண்களை திருமணம் செய்யும்போது அவர்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவது குறித்தும் விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்துள்ளார்.
என்னென்ன விவகாரங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்பது குறித்து அனைத்து தரப்பு வழக்கறிஞர்களும் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் வழக்கறிஞர்களிடம் ஒருமித்த கருத்த எட்டப்படவில்லை. இதைத் தொடர்ந்து, எந்தெந்த விவகாரங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றமே வரையறுத்துக் கொள்ளும் என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்தார்.
இந்நிலையில் சபரிமலை வழக்கு கடந்த 3-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது,மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் வாதாடினார். அவர் கூறும்போது, ‘‘மறுஆய்வு மனுக்களை பொறுத்தவரை ‘சட்டம் சார்ந்த கேள்விகள்' பெரிய அமர்வுக்கு மாற்றப்படக்கூடாது’’ என்று வாதிட்டார். இந்த கருத்தை மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் உள்ளிட்டோரும் ஆமோதித்தனர்.
சபரிமலை வழக்கு இன்று விசாரணைக்கு வரும்போது, மறுஆய்வு மனுக்களில் ‘சட்டம் சார்ந்த கேள்விகள்' பெரிய அமர்வுக்கு மாற்றப்படலாமா என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.