ராணுவ கமாண்டர்களாக பதவி வகிப்பது பெண்களுக்கு சவாலானது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை

ராணுவ கமாண்டர்களாக பதவி வகிப்பது பெண்களுக்கு சவாலானது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை
Updated on
1 min read

உடல் தகுதி, குடும்பப் பொறுப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெண்களால் ராணுவ கமாண்டர்களாக பதவி வகிப்பது சிரமம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விமானப் படை, கடற்படை ஆகியவற்றில் பெண்கள் குறுகிய காலம் மட்டுமே பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இதனை எதிர்த்து கடற்படை பெண் அதிகாரிகள் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த 2010-ம் ஆண்டு விசாரித்த உயர் நீதிமன்றம், கடற்படையில் பெண்களை முழுமையான சேவையில் பணியமர்த்துமாறு உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணையின்போது, ராணுவத்தில் கமாண்டர் போன்ற பதவியிடங்களுக்கு பெண்களை ஏன் தேர்வு செய்யக் கூடாது என நீதிபதிகள் கேள்வியெழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று அறிக்கையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆண்களை ஒப்பிடும்போது, பெண்களின் உடல் வலிமை மிகவும் குறைவு. அதேபோல், கர்ப்பக் காலங்களில் அவர்கள் நீண்ட விடுமுறை எடுக்க வேண்டியிருக்கும். குழந்தைகளை பராமரிப்பது, கணவர்களின் தேவைகளை கவனிப்பது உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் அவர்களுக்கு உள்ளன. இதனால், ராணுவத்தில் கமாண்டர்களாக பணிபுரிவது பெண்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும்.

இது ஒருபுறம் இருக்க, ராணுவத்தில் பணிபுரியும் ஆண்கள், உடல் வலிமையில் குன்றிய பெண் அதிகாரிகளின் உத்தரவுகளை ஏற்று நடப்பதும் கேள்விக்குறிதான். எனவே, இதுபோன்ற காரணங்களால் ராணுவக் கமாண்டர்களாக பெண்களை பணியமர்த்துவது அரசுக்கு சவாலான விஷயம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை பரிசீலித்த நீதிபதிகள், “முதலில், பெண்களை ராணுவக் கமாண்டர் பதவியில் அரசாங்கம் அமர்த்திப் பார்க்கட்டும்” எனக் கருத்து தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in