

இந்தியாவின் பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதியை அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.35 ஆயிரம் கோடியாக உயர்த்துவதே மத்திய அரசின் இலக்கு என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இந்திய ராணுவம் சார்பில் பாதுகாப்புத் தளவாடங்களின் கண்காட்சி லக்னோவில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
இந்தியா போன்ற ஒரு பெரிய நாடு தமது பாதுகாப்புத் தேவைக்காக இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்க கூடாது. ஆனால், நம் நாட்டின் முந்தைய ஆட்சியாளர்கள் இதற்கான கொள்கைகளை வகுக்காததால், பாதுகாப்பு தளவாடங்களின் மிகப்பெரிய இறக்குமதி சந்தையாக இந்தியா இருக்கிறது. இந்த நிலையை நாம் மாற்ற வேண்டும்.
இதனைக் கருத்தில்கொண்டே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ‘இந்தியாவில் உற்பத்தி' (மேக் இன் இந்தியா) என்ற திட்டத்தை முன்னெடுத்தது. அதன்படி, ராணுவ பீரங்கிகள், விமானத் தாங்கி கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், இலகு ரக போர் விமானங்கள், போர் ஹெலிகாப்டர்கள் ஆகியவை நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், அவை பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.
கடந்த 2014-ம் ஆண்டு பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி மதிப்பு ரூ.2,000 கோடியாக இருந்தது. கடந்த 2 ஆண்டுகளில் இது 17 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த ஏற்றுமதியை ரூ. 35 ஆயிரம் கோடி அளவுக்கு உயர்த்துவதே அரசின் இலக்கு. இவ்வாறு நரேந்திர மோடி பேசினார். - பிடிஐ