

நிர்மலா சீதாராமனை நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்க பயனற்ற இந்த பட்ஜெட்டை பிரதமர் மோடி பயன்படுத்துவார் என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டில் பொருளாதாரச் சரிவுக்கு மத்திய அரசின் பண மதிப்பு நீக்கமும், ஜிஎஸ்டி வரியும் காரணம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். டெல்லியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கூட இதே கூற்றை முன்வைத்து மத்திய அரசைக் கடுமையாகச் சாடினார்.
இதற்கிடையே கடந்த 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட் குறித்து கருத்துத் தெரிவித்த ராகுல் காந்தி, ''எந்தவிதமான புத்திசாலித்தனமும் இல்லாத பட்ஜெட். நாட்டில் நிலவும் வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினை, பொருளாதாரச் சரிவு ஆகியவற்றைச் சமாளிக்கத் தெளிவான ஆலோசனைகள், திட்டங்கள் இல்லாத பட்ஜெட்'' என்று விமர்சித்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தி ட்விட்டரில் பிரதமர் மோடியைக் குற்றம் சாட்டி கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் " அன்புக்குரிய பிரதமரே, தேசத்தின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. இந்தப் பழியிலிருந்து எப்படித் தப்பிக்கலாம் என்று உங்கள் மூளை கண்டிப்பாகச் சிந்திக்கும். எந்தவிதமான புத்திசாலித்தனமும் இல்லாமல் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்தப் பயனற்ற பட்ஜெட்டைப் பயன்படுத்தி அவரை நிதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கி ஒட்டுமொத்தப் பழியையும் அவர் மீது சுமத்துங்கள். பிரச்சினை அனைத்தும் தீர்ந்துவிடும் " எனத் தெரிவித்துள்ளார்.