

மத்தியில் ஆளும் பாஜக அரசு நாட்டில் பிரிவினையைத் தூண்டுகிறது என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் குற்றம் சாட்டியுள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யு மான சசி தரூர் பேசியதாவது:
மத்தியில் ஆளும் பாஜக அரசு நாட்டில் பிரிவினையைத் தூண்டி வருகிறது. இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பகைமையை ஏற்படுத்துகிறது. இந்தி மொழி பேசுவோருக்கும் இதர பிராந்திய மொழிகளை பேசுவோருக்கும் இடையே சண்டையை தூண்டுகிறது. கடந்த சில மாதங்களாக இந்திய ஜனநாயகத்தின் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் தோல்வியைத் தழுவியுள்ளன. இனிமேல் மத்திய அரசு தனது திட்டங்களுக்கு ‘சிட் டவுன் இந்தியா, ஷட் டவுன் இந்தியா, ஷட் அப் இந்தியா' என்று பெயரிடலாம். அரசை விமர்சித்து பேசும் நகைச்சுவை பேச்சாளர்களுக்கு தடை விதிப்பதில் மத்திய அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.
புதிய இந்தியாவை உருவாக்குவதாக மத்திய அரசு கூறுகிறது. அந்த புதிய இந்தியா சிலருக்கு மட்டுமா, அல்லது அனைவருக்குமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சிஏஜி உள்ளிட்ட அமைப்புகளைக்கூட மத்திய அரசு குற்றம் சாட்டுகிறது. ஆளும் கட்சியின் அறிவிப்பு பலகையாக நாடாளுமன்றம் மாறிவிட்டது. குடியரசுத் தலைவர் உரையில் உண்மைகள் இல்லை.
5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவோம் என்று மத்திய அரசு கூறுகிறது. அதற்கு ஆண்டுதோறும் 12% பொருளாதார வளர்ச்சி அவசியம். மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.